தினமும் 6 மணி நேரம் கூட தூங்கவில்லை எனில்... - அணிவகுக்கும் ஆபத்துகள்!


படம்: மெட்டா ஏஐ

அண்மைக் காலமாக, உறக்கமின்மை என்பது ஆபத்தான உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதன் பின்புலம் குறித்தும், விளைவுகள் குறித்தும் பொதுநல மருத்துவர்கள் பகிர்ந்தவை...

“நள்ளிரவைத் தாண்டியும் தொலைக்காட்சி பார்ப்பது, ஒடிடியில் படம் பார்ப்பது, யூடியூபில் வீடியோ பார்ப்பது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடுவது என சமூக வலைதளங்களில் நேரத்தைத் தொலைத்துவிட்டு, மிகவும் நேரம் கழித்துத் தூங்கச்செல்வது இளையோர் மத்தியில் வழக்கமாகிவருகிறது. ஊடகக் கருவிகள் உமிழும் ஒளிக்கதிர்கள், உடலில் மெலட்டோனின் சுரப்பைச் சுருக்கி, இயற்கையாக அமைந்திருக்கும் உறக்கச் சுழற்சியைப் பாதிக்கிறது.

குறிப்பாக, மேற்கத்திய உணவுமுறை உறக்கம் குறைவதற்கு அடித்தளம் போடுகிறது. இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் பலரும் வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது இரவில் கடைக்குச் சென்று கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால் உணவு செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. செரிமானத்துக்காக வயிற்றுப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வது, உறக்கத்தைத் தாமதப்படுத்தும்.

ஒருவர் நாளொன்றுக்குக் குறைந்தது 6 மணி நேரம் உறங்க வேண்டும். அதிகபட்சமாக 8 மணி நேரம் உறங்கினால் நல்லது. ஒன்றிரெண்டு நாட்களுக்குத் உறக்கம் குறைந்தால் தவறில்லை. உறக்கம் குறைவது தொடர்கதையானால் உடல்நலம், மனநலம், பணிநலம் ஆகியவை பாதிக்கப்படும்.

ஆரம்பத்தில் வழக்கமான சுறுசுறுப்பு குறையும். கவனம் சிதறும். பணித் திறன் மறையும். மறதியும் களைப்பும் படுத்தும். இந்தத் தொடக்கநிலையில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அடுத்ததாக எரிச்சல், கோபம், மன அழுத்தம் ஆகியவை அதிகரித்து ரத்த அழுத்தத்தை எகிறச் செய்யும். நோய்த் தடுப்பாற்றல் குறையும். பாலுறவு சிக்கலாகும்.

உறக்கம் என்பது அழற்சியை அடக்கும் ஆயுதம். இது இல்லாதபோது உடலில் பல உறுப்புகளில் அழற்சி ஏற்படுகிறது. முக்கியமாக, கணையத்தில் ஏற்படும் அழற்சிதான் நீரிழிவுக்கு அடிப்படை. அடங்காத நீரிழிவு இதயத்துக்கு ஆகாது என்று சொல்லத் தேவையில்லை. உடற்பருமன் என்பது ரத்த கொலஸ்ட்ராலைக் கூட்டி மாரடைப்பைத் தூண்டுவது உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆணி வேராக இருப்பதை நாம் அறிவோம்.

அதேவேளையில், உறக்கம் குறைவது உடல் பருமனுக்கும் வழிசெய்யும் என்பதைப் பலரும் அறிவதில்லை. உறக்கம் குறைந்தவர்களுக்கு வயிறு நிரம்பியதை உணர முடியாமலும், அதிகப் பசி தொடர்வதாலும் கூடுதலாகச் சாப்பிட்டு உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள்.

இப்போதெல்லாம் வீட்டில் இருந்துகொண்டே பலரும் பணி செய்வதால், அலுவலகத்தில் நடப்பதுபோல் வீட்டில் நடப்பது குறைந்துவிட்டது. அதிக நேரம் அமர்ந்துகொண்டே பணி செய்வது அதிகமாகிவிட்டது. 2 மணி நேரம் தொடர்ந்து அமர்ந்துகொண்டே பணி செய்வது ஒரு சிகரெட் புகைப்பதற்குச் சமம். இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்தான்.

அதேபோல், இரவில் தாமதமாக உறங்கச்சென்று, காலையில் நேரம் கழித்துக் கண் விழிப்பதால், இன்றைய இளையோருக்கு உடற்பயிற்சி ரொம்பவே குறைந்துவிட்டது. சோம்பலான வாழ்க்கைமுறை இயல்பாகிவிட்டது. இது மாரடைப்புக்கு வசதியாகிவிட்டது. உறக்கம் குறையும் பிரச்சினை இப்போது குழந்தைகளுக்கும் பரவிவருகிறது என்பது கூடுதல் கவலை. அமைதியாகப் பரவிவரும் உறக்கமின்மை எனும் ஆட்கொல்லியை அடக்க வேண்டியது அவசியம்” என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.

x