விழுப்புரம்: திண்டிவனம் அருகே மானூர் கிராமத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியதாவது:
கொற்றவை
சுமார் 5 அடி உயர பலகைக் கல்லில் 8 கரங்களுடன் கூடிய கொற்றவைச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 6 கரங்களில் தக்க ஆயுதங்களை ஏந்தி எருமைத் தலையின் மீது நின்றிருக்கிறார் கொற்றவை. சிற்பத்தின் பிண்ணனியில் அவளது வாகனமான மான் பெரிய அளவில் நின்றிருக்கிறது. மானின் கழுத்தில் உள்ள அணிகலன் நுட்பமாகக் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் முன் வலது கரம் மானுக்கு எதையோ உண்பதற்குத் தருவது போலவும் அமைந்துள்ளது. முன் இடது கரம் இடுப்பின் மீது வைத்த நிலையில் உள்ளது. இதன் அருகே கிளி இடம்பெற்றுள்ளது.
பெரும்பாலான கொற்றவைச் சிற்பங்களில் அடியவர் இரண்டு பேர் காட்டப்பட்டு இருப்பார்கள். ஆனால் இந்தச் சிற்பத்தில் மூன்றாவதாக ஒருவரும் காட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். அழகான தலை அலங்காரத்துடன் நின்றிருக்கும் அந்த நபர் இப்பகுதியின் குறுநில மன்னன் அல்லது படைத்தலைவனாக இருக்கலாம். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொற்றவைச் சிற்பங்களில் மானூர் சிற்பம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.
விஷ்ணு
சுமார் 4 அடி உயர பலகைக் கல்லில் நின்ற நிலையில் 4 கரங்களுடன் விஷ்ணு காட்சி தருகிறார். பின்னிரு கரங்களில் வலது கரம் பிரயோகச் சக்கரத்தையும் இடது கரம் சங்கையும் ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் அபய முத்திரையுடனும் இடுப்பில் கை வைத்தும் காணப்படுகின்றன. அழகிய ஆடை அணிகலன்களுடன் மிகவும் கம்பீரமாகக் காட்சி தருகிறார் விஷ்ணு.
கலைநயம் மிக்க இந்தச் சிற்பங்கள் பல்லவர் காலத்தைச் (கி.பி.8-9 ம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும். இதனை மூத்தத் தொல்லியல் ஆய்வாளர் கி.ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார். 1,200 ஆண்டுகளுக்கு முன்பு மானூர் கிராமம் வரலாற்றுச் சிறப்புடன் இருந்திருக்கிறது என்பதை இந்தச் சிற்பங்கள் உணர்த்துகின்றன. 1,000 ஆண்டுகளைக் கடந்தும் இவை வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.