திருப்புவனம் வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சிலை 8-ம் நூற்றாண்டை சேர்ந்த ‘சாமுண்டா’ என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் வைகை ஆற்றில் கானூர் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அதனருகே பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதை வருவாய்த் துறையினர் மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இந்நிலையில் அந்த சிலையை வட்டாட்சியர் விஜயகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர் வினோத் குமார் ஆகியோர் முன்னிலையில் தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம், மாவட்ட தொல்லியல் அலுவலர் அஜய்குமார், கீழடி அகழ் வைப்பக தொல்லியல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது: பழமையான கல் சிறை 7 தாய்மார்களில் ஒருவரான சாமுண்டா. மேலும் அந்த சிலை 2 அடி உயரம், 1.5 அடி அகலம் உள்ளது. இச்சிலை 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததது. முற்கால பாண்டியர் கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் லலிதாசன தோரணையில் நான்கு கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மேல் வலக் கையில் நாகம் ஏந்தியும், கீழ் வலது கை அபய முத்திரையிலும், கீழ் இடது கை மடியில் வைத்திருப்பது போல் உள்ளது.
மேல் இடது கை உடைந்த நிலையில் உள்ளது. அழகிய கண்கள், நேர்த்தியான மூக்கு, ஆழமாக வெட்பட்ட உதடுகள், நீளமான காது மடல்கள் உள்ளன. தலையில் கபால மகுடம், இரு காதுகளிலும் பிரேத குண்டலங்கள், மார்பில் கபால மாலை உள்ளது. சிகையில் கபால மகுடம், கழுத்து, கை, கால்களில் அணிகலன்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. இடை ஆடை, மார்பு கச்சையும் உள்ளது. இச்சிலையை சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.