இப்போதெல்லாம் நன்றாகத் தூங்கி எழுவதற்கு தினமும் தூக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.
தூக்க மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால், உடலில் வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், திடீரென அதை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும்.
அதிக காலம் தூக்க மாத்திரையைப் பயன்படுத்தினால் ஞாபக மறதி ஏற்படும். பகலில் மயக்க நிலை வரும். நடை தடுமாறும். மனக் குழப்பம் தலைகாட்டும்.
முடிந்த அளவுக்குத் தூக்க மாத்திரையைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். எனெனில், பக்கவிளைவுகள் அதிகம் இல்லாத மாத்திரைகளை மருத்துவர்களே பரிந்துரைப்பர் என்கின்றனர் மருத்துவ ஆலோசகர்கள்.
ஆரோக்கியமான தூக்கத்துக்கு... - இரவில் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் தொடர்ந்து 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்குவதுதான் ஆரோக்கியத் தூக்கம். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை, அவரவர் விருப்பத்துக்கேற்ப தூங்கிக்கொள்ளலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இரவு உணவை 8 மணிக்குள் உட்கொண்டால் நல்லது. அப்போதே நிறையத் தண்ணீர் குடித்துவிட வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். குளித்துவிட்டுத் தூங்கினால் தூக்கம் வரும் என்பார்கள். தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே குளித்துவிட வேண்டும்.
இரவில் கொழுப்பு மிகுந்த உணவைத் தவிர்க்க வேண்டும். காபி, தேநீர், மது, கோலா பானங்கள் அருந்த வேண்டாம். சாக்லேட் வேண்டாம். மாறாக, பால் குடிக்கலாம். பழம் சாப்பிடலாம். தினமும் காலையில் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்ய வேண்டும். உடற்பயிற்சிகளை இரவில் செய்ய வேண்டாம்.
அன்றாட வேலைகளில் பாதிப்பில்லை என்றால் பகலில் அதிகபட்சம் 45 நிமிடம் குட்டித் தூக்கம் போடலாம். ஆனால், முதியவர்களும் இரவில் நெடுநேரம் தூக்கம் வரவில்லை என்று சொல்பவர்களும் பகலில் குட்டித்தூக்கம் போடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
படுக்கையறை நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் இருந்தால் நல்லது. அங்கே அதிக வெளிச்சம் கூடாது. அதிக சத்தமும் ஆகாது. மிக முக்கியமாக, கண்களை மூடும்போதே கவலைகளையும் மூடினால் சுகமான தூக்கம் உறுதி என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.