ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் 7,698 ஆமை முட்டைகள் சேகரித்த வனத்துறையினர்!


ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் 7, 698 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். 112 ஆமை குஞ்சுகளை கடலில் விட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், மண்டபம், அரியமான், அழகன் குளம், ஆற்றங்கரை, புதுவலசை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. கடல் ஆமை முட்டையிடும் பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாய் மற்றும் பறவைகளால் முட்டைகள் சேதமடைவதை தடுக்கும் விதமாக ராமநாதபுரம் வன உயிரின கோட்டத்தில் 10 கடல் ஆமை முட்டை பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை வனத்துறையினர் மீனவர்களின் உதவியுடன் 7,698 கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப் பட்டு குஞ்சு பொரிப்பதற்காக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றிலிருந்து தற்போது 112 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் வலையில் சிக்கும் கடல் ஆமைகள் மற்றும் இதர பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை மீட்டு எடுத்து கடலில் விடும் மீனவர்கள் தங்களின் விவரங்களை வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மீண்டும் ஆமைகளை கடலில் விடும் மீனவர்களுக்கு வனத்துறை சார்பில் சன்மானம் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

x