கிருஷ்ணகிரி: அவதானப்பட்டி ஏரியில் புதிய படகுகள் இயக்கவும், ஏரியில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி ஏரி 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் கடந்த 2005ம் ஆண்டு ரூ.77 லட்சம் மதிப்பில் 5 ஏக்கர் பரப்பளவில் சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கப்பட்டது. 10 முதல் 15 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில் 5 கால்மிதி (பெடலிங்) படகுகள், தலா 1 துடுப்பு மற்றும் இயந்திரப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படகு இல்லத்தில் விடுமுறை நாட்களில் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட அண்டைய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் வந்து பொழுதுபோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஏரியில் படகு நிறுத்தும் பகுதியில் அதிகளவில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்து படர்ந்துள்ளன.மேலும், படகுகள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியது என்பதால், 50 சதவீதம் படகுகள் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மேலும், இயக்கத்தில் உள்ள படகுகளும் மேல்பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இப்படகில் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் செல்லும் நிலையுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சத்யமூர்த்தி மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குப் பொழுதுபோக்கு இடங்கள் குறிப்பிடும்படியாக இலலை. எனவே, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்ன ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி மற்றும் கிருஷ்ணகிரி அணையில் படகு சவாரி தொடங்க வேண்டும்.
இதேபோல, தற்போது பொதுமக்களுக்குப் பொழுதுபோக்கு இடமாக இருக்கும் அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தை மேம்படுத்தவும், புதிதாகப் படகுகள் வாங்கி இயக்கவும், ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.