இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாமா? - இளநீரும் முக்கியக் குறிப்புகளும்!


சென்னை: கோடை காலம் தொடங்கும் முன்பே பல இடங்களில் வெயில் வாட்டியெடுக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள இயற்கை வழங்கிய பல அற்புதங்களில் முக்கியமானது ‘இளநீர்’. அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பார்போம்.

குளுமையும் தித்திப்பும் நிறைந்த இளநீரில் சோடியம், கால்சியம், குளுகோஸ், புரதம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இளநீர் என்பது தாகத்தைப் போக்கிப் புத்துணர்ச்சியை அளிக்கும் குளுமையான பானம். இது, ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

பசியைத் தூண்டவல்லது இளநீர். பித்தவாதத்தைக் குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன.

இளநீரானது உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும். சிறுநீர்ப் பெருக்கியாகவும் இளநீர் செயல்படுகிறது. கோடையில் குடிக்க இளநீர்தான் மிகச் சிறந்த பானம். சத்தான, சுத்தமான பானம்.

இளநீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் எனில், இளநீரைத் தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடித்தால், குளிர்ந்து இருக்கும்.

இளநீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சில மணி நேரம் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவக் குணங்கள் மாறிவிடும். எனவே, இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்காமல், தேவையானபோது வாங்கிப் பருகுவதே சாலச் சிறந்தது.

இளநீரில் உள்ள தாதுக்கள், நம் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. உடலில் நீரிழப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைக்கும் வல்லமை மிக்கது இளநீர்.

x