‘72 மணி நேர விதி’ ஏன் முக்கியம்? - காதலர் தினம் ஸ்பெஷல்


காதல் உறவில் பிரச்சினை என்று வரும்போது அதை எந்த அளவுக்குப் பக்குவத்துடன் கையாள்கிறீர்கள் என்பதுதான் உங்கள் உறவுக்கான அடித்தளம். காதல் உறவிலும் சரி, இணை வாழ்க்கையிலும் சரி, ‘72 மணி நேர’ விதியைக் கடைப்பிடிப்பது உங்கள் உறவை எல்லா வகையிலும் வலிமைப்படுத்தும்.

உங்கள் காதலரின் செயல்களோ வார்த்தைகளோ உங்களைக் கோபப்படுத்தினால், அதைப் பற்றிய உங்கள் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துவதற்கு அடுத்த 72 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

உடனடியாக எதிர்வினையாற்றாமல், எந்தவொரு முடிவுக்கும் வருவதற்குமுன்பு 72 மணி நேர இடைவெளியை எடுத்துக்கொள்ளுங்கள். 72 மணி நேரத்துக்குப் பிறகும் உங்கள் காதலரின் செய்கையோ சொற்களோ உங்களுக்குப் பிரச்சினையாகத் தெரியும்பட்சத்தில் அதை அவருடன் விவாதிக்கலாம்.

இந்த 72 மணி நேர இடைவெளியால், உங்களால் சூழ்நிலையைக் கோபத்துடன் அணுகாமல் தெளிவாக அணுக முடியும். அத்துடன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் இயல்பாக விளக்க முடியும்.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்கோட் பிரவுன் என்ற மனநல ஆலோசகர், ‘கிக்ஸ்டார்ட் யுவர் ரிலேஷன்ஷிப் நவ்! மூவ் ஆன் ஆர் மூவ் அவுட்’ என்ற தன்னுடைய புத்தகத்தில் இந்த 72 மணி நேர விதி எப்படி உறவுகளில் வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பது பற்றி விளக்கியிருக்கிறார்.

- கனி

x