”ஆளும் அறிவும் வளர இரும்புச்சத்து அவசியம்” - உலக ரத்த சோகை தினத்தில் அரசு மருத்துவர் விவரிப்பு


மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று உலக ரத்த சோகை விழிப்புணர்வு தினத்தில் அரசு ராசாசி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் நந்தினி குப்புசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: ஆளும் வளரவும், அறிவும் வளரவும் இரும்புச் சத்து அவசியம், இரும்புச் சத்துள்ள உணவுகள் உண்பதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுக்கலாம் என அரசு ராசாசி மருத்துவமனையி்ன் குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் நந்தினி குப்புசாமி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை, இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் சார்பில் உலக ரத்த சோகை விழிப்புணர்வு தினம் இன்று இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.

இதில் அரசு ராசாசி மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் நந்தினி குப்புசாமி, மாணவர்களிடம் ரத்த சோகை விழிப்புணர்வு குறித்து பேசியதாவது: "ஆளும் வளர வேண்டும், அறிவு வளர வேண்டும், அதற்கு இரும்புச் சத்து அவசியம். மூளை வளர்ச்சிக்கு இரும்புச்சத்து அவசியம். உணவில் இரும்புச் சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. அது குறித்த பாதிப்புகளை தெரிந்துகொள்ளவும், நிவர்த்தி செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ரத்த சோகை உள்ளவர்கள் அதிக நேரம் தூங்குவர், சில நேரங்களில் தூக்கமின்றியும் இருப்பர். உடல் சோர்வாகவும், உடலெல்லாம் வலி இருப்பது போல் உணர்வர். அதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சோதித்துப் பார்க்க வேண்டும். அதற்கு அரசு மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை அளிக்கப்படுகிறது. கீரை வகைகள், மரபணு மாற்றப்படாத பேரீச்சம் பழங்கள் சாப்பிட வேண்டும். மேலும் பஞ்சாமிர்தத்தில் அதிகளவு இரும்புச் சத்தும் உள்ளது.

அசைவத்தில் ஆட்டுக் கறி, நாட்டுக் கோழி, மீன்கள் சாப்பிட்டால் இரும்புச் சத்து கிடைக்கும். இத்தகைய சத்துகள் உடலுக்கு முழுவதும் கிடைக்க குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு பிப்.10ம் தேதியை குடற்புழு நீக்க தினமாக மத்திய அரசு கடைபிடிக்கிறது. வருங்கால தலைமுறை யான வளரிளம் பருவத்தினருக்கு ரத்த சோகையை வராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் மாணவர்களுக்கு வாரம்தோறும் வியாழக் கிழமை இரும்புச் சத்து மாத்திரை வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து கிடைக்கும் வகையில் காலை உணவு, மதியம் சத்துணவு, முட்டைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான இளம் தலைமுறையினர் உருவாகின்றனர். இரும்புச் சத்துக்கு முக்கியத்துவம் அளித்து உணவு உண்ண வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், டாக்டர்கள் ஜெ.செந்தில்குமார், பொருளாளர் பிரசன்னா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இதில் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரகுபாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஈஸ்வரன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

x