புதுடெல்லி: புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அந்தப் புகையை சுவாசிப்பவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகளுக்கும் மரபணு ரீதியில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைப்பிடித்தல் உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நிலைகளுக்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்நிலையில், புகைப் பிடிப்பவர்களுக்கு பல உயிர்கொல்லி நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும் நிலையில், அந்தப் புகையை சுவாசிப்பவர்களுக்கு இது மாதிரியான நோய்கள் வருவதாக முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதை நிருபிக்கும் வகையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 7-10 வயதுடைய கிட்டத்தட்ட 2,700 குழந்தைகளின் ரத்த மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்தனர். அதில், புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அந்தப் புகையை சுவாசிப்பவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகளுக்கும் மரபணு ரீதியில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக புகைப்பிடிப்பவர்கள் ஆஸ்துமா, குழந்தை பிறப்பதில் சிக்கல், புற்றுநோய் மற்றும் இதயநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவித்தன. தற்போது, அந்தப் புகையை சுவாசிப்பவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என ஆய்வுகள் வெளியாகியுள்ளது.