நாட்றம்பள்ளி அருகே கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரர்கள் நடுகல் கண்டெடுப்பு


நாட்றம்பள்ளி அருகே கி.பி.15ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரர்கள் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே 600 ஆண்டுகள் பழமையான போர் வீரர்கள் நடுகல் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் பொம்மிகுப்பம் வே.ராதாகிருஷ்ணன், முத்தமிழ்வேந்தன் மற்றும் ஓய்வுப் பெற்ற ஆசிரியர் பெருமாள் ஆகியோர் கொண்ட ஆய்வுக் குழுவினர் நாட்றம்பள்ளி அடுத்த சொரைக்காயல் நத்தம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கள ஆய்வு நடத்தியபோது கி.பி.15ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரர்கள் நடுகல்லை கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறியதாவது, ”பொங்கல் பண்டிகையையொட்டி முன்னோர்களுக்குப் படையலிட்டு வழிபடும் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது நமது மரபாகும். அந்த வகையில் பழந்தமிழர் வழிபாட்டு மரபின் நீட்சியாக விளங்கும் தொன்மைச் சான்றுகளைத் தேடி எங்கள் ஆய்வுக் குழுவினர் பல்வேறு இடங்களில் களப் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம், சொரைக்காயல் நத்தம் கிராமத்தில் உள்ள கந்தன் நகர், போடிவீட்டு வட்டம் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நடுகல் ஒன்றை நாங்கள் கண்டறிந்தோம். இந்த நடுகல்லானது 6 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நடுகல்லாகும். நடுகல்லில் இரண்டு வீரர்கள் எதிரெதிர் மோதிக்கொள்ளும் போர் நிகழ்வு சித்தரிக்கப் பட்டுள்ளது. நடுகல்லின் வலது புறம் உள்ள வீரன் இடது புறம் உள்ள வீரன் தன் வலது கையில் கட்டாரி என்ற ஆயுதத்தால் எதிரே உள்ள வீரனின் வயிற்றில் குத்தித் தாக்குகிறார். கட்டாரி வீரனின் வயிற்றின் பாய்ந்து மறுபுறம் வெளியே வந்த நிலையில் உள்ளது.

இடது புறமுள்ள வீரன் தம் வலது கையில் உள்ள நீண்ட வேலினால் எதிரே உள்ள வீரனின் இடது தோளில் தாக்கிய நிலையில், வேலானாது தோளில் பாய்ந்து முதுகின் பின்புறம் வெளிவந்த நிலையில் காணப்படுகிறது. இரு வீரர்களின் தலையிலும் பக்கவாட்டில் சரிந்த அலங்கரிக்கப்பட்ட கொண்டையினை வைத்துள்ளனர். இருவரது கழுத்திலும் ‘சரபளி’ என்ற ஆபரணத்தையும், கால்களில் கழலும், கைகளில் பூணும் அணிந்துள்ளனர்.

அரையாடை என்ற போருக்கு உகந்த ஆடையினை அணிந்த இருவரது கண்களும் கோபக்கனல் பொங்கக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இக்காட்சிகள் யாவும் இவ்விருவரும் உக்கிரமாகச் சண்டையிட்டு மாண்டனர் என்று அறிவிக்கும் வண்ணம் இந்த நடுகல் காணப்படுகிறது. போரிட்டு இறக்கும் வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் மரபு தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரும் பண்பாடாகும்.

அந்த வகையில் இந்நடுகல் தமிழர் பண்பாட்டின் நீட்சியாக அமைந்த ஒன்றாக கருதப்படுகிறது. சிறப்பான சிற்ப வேலைப் பாட்டுடன் அமைக்கப்பட்ட இந்த நடுகல்லானது இப்பகுதியில் நடைபெற்ற போர் நிகழ்விற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. நடுகல்லின் அமைப்பை வைத்துப் பார்க்கும் போது கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். இந்நடுகல்லினைச் சுற்றிலும் புதர்மண்டிக்கிடந்தது.

அவ்விடத்தினை நிலத்தின் உரிமையாளரின் உதவியோடு சுத்தம் செய்து கழுவி, அதன் சிறப்பை எடுத்துக் கூறி அதனைப் பராமரிக்குமாறு அப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம். வழக்கமாக காணும் பொங்கல் அன்று இந்நடுகல்லுக்கு நவதானியங்கள், காய்கறிகள், மலர்கள் வைத்துப் படைப்பது வழக்கம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

முன்னோர் வழிபாடே தமிழர்களின் பிரதான வழிபாட்டு முறை என்பதற்குச் சான்றாக இதுபோன்ற நடுகற்கள் அமைகின்றன. பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் இந்நடுகல்லினை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது” என்று முனைவர் ஆ.பிரபு கூறினார்.

x