கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் 930 மில்லி கிராம் தங்கத்தில் சிறிய வடிவிலான சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன் தெருவில் வசிப்பவர் முத்துக்குமரன் (40). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் 12 வயதிலிருந்து தங்க நகைகள் செய்து வருகிறார். குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருட்களை செய்து வருகிறார்.
ஏற்கெனவே இவர் 640 மில்லி கிராமில் 1 செ.மீட்டர் உயரத்தில் மெக்கா, மதினா உருவங்கள், அதனுடன் அல்லாஹ் வார்த்தை 10 மில்லி கிராமிலும் செய்துள்ளார். 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் 1.5 இன்ச் நீளம், 1 இன்ச் உயரம் மற்றும் அகலத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்துள்ளார். 630 மில்லி கிராமில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவத்தை 3 செ.மீ உயரம், 3 செ.மீ அகலத்திலும், 99 வயதை குறிக்கும் வகையில் 99 மில்லி கிராமில் கலைஞர் என்ற வார்த்தையையும் செய்துள்ளார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், நேற்று இவர் 2.5 மில்லி மீட்டர் உயரத்தில் 930 மில்லி கிராம் தங்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் செய்துள்ளார். இந்த தேரில் சொர்ண லிங்கமும் உள்ளது. தேர் 900 மில்லி கிராமிலும், சொர்ண லிங்கம் 30 மில்லி கிராமிலும் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொற்கொல்லர் முத்துக்குமரன் கூறுகையில், “சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத தேரோட்டம் வரும் 12-ம் தேதியும், தரிசன விழா 13-ம் தேதியும் நடக்க உள்ளது. இதனை எண்ணி 930 மில்லி கிராம் தங்கத்தில் சொர்ண லிங்கத்துடன் கூடிய தேரை செய்தேன். இந்த தேர் நான்கு சக்கரங்களுடன் இழுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.தங்கத்தில் செய்யப்பட்ட சிறிய வடிவிலான நடராஜர் கோயில் தேர். (அடுத்த படம்) உள்ளங்கையில் தேருடன் பொற்கொல்லர் முத்துக்குமரன்.