புத்தாண்டு விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கைத் தமிழரின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல் தானம்


புதுச்சேரி: புத்தாண்டு விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கைத் தமிழரின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல் தானமாக தரப்பட்டு ஐவருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன.

புதுச்சேரி அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த விஜயகுமார் - புவனேஸ்வரி தம்பதியரின் மகன் பிரேம்குமார் (19). 12-ம் வகுப்பு படித்தவர். மேல் படிப்பு படிக்க முடியாமல் பெயிண்டர் ஆக பணியாற்றி வந்தார்.

கடந்த 31-ம் தேதி புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகே தவறி விழுந்தார். தலையில் காயங்களுடன் அருகில் உள்ள காலாப்பட்டு பிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மூளை சாவடைந்தார்.

அவர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கும் மருத்துவர்கள் அவரது மூளைச்சாவை உறுதி செய்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதற்காக அனுமதி பெறப்பட்டு அறுவை சிகிச்சை இன்று நடந்தது.

இதுதொடர்பாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முருகேசன் கூறுகையில், “பிரேம்குமார் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தவுடன் அவரது தரப்பில் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி சிறுநீரகம் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சீறுநீரகம் இங்குள்ளவருக்கும் பொருத்தப்பட்டது. கண்கள் இரண்டும் அரவிந்த் மருத்துவமனைக்கு தரப்பட்டது. கல்லீரல் தனியார் மருத்துவமனைக்கு தரப்பட்டது. இதயம், நுரையீரல் உறுப்புகளை சென்னை மற்றும் ஹைதராபாத் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், சாலைவழியாக சென்று விமானம் மூலம் செல்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்பிருந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஏர்ஆம்புலன்ஸ் இருந்திருந்தால் கொண்டு சென்றிருக்க முடியும். தற்போது இரு கண்கள், இரு சீறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை ஐவருக்கு பொருத்தப்படும் இது புதுச்சேரியில் முதல் முறையாக நடந்தது” என்றார்.

உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் போலீஸார் பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதையடுத்து பிரேம்குமாரின் உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

x