நாகர்கோவில்: குமரி விவேகானந்தர் மண்டபத்தை ஓர் ஆண்டில் 20.14 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இங்கு செல்வதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் கடலில் பொதிகை, குகன்,விவேகானந்தா ஆகிய 3 படகுகள் மூலம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சேவை நடைபெற்று வருகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவிற்காக கண்ணாடி கூண்டு பாலப்பணி நடைபெற்றதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நடைபெறவில்லை. விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து நடந்தது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 20 லட்சத்து 14 ஆயிரத்து 563 சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.
ஜனவரி மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 34ஆயிரத்து 106 பேர் விவேகானந்தர் மண்டபம் சென்று வந்துள்ளனர். பிப்ரவரி 1 லட்சத்து 58 ஆயிரத்து 802 பேரும், மார்ச்சில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 867பேரும், மே மாதம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 318 பேரும், ஜூனில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 472 பேரும், ஜூலையில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 974 பேரும், ஆகஸ்டில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 பேரும், செப்டம்பரில்1 லட்சத்து 51 ஆயிரத்து 803 பேரும், அக்டோபரில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 489 பேரும், நவம்பரில் 2 லட்சத்து 9 ஆயிரம் பேர், டிசம்பர் 1 லட்சத்து 93 ஆயிரத்து 942 பேர் படகில் பயணம் செய்துள்ளனர்.
முந்தைய ஆண்டான 2023ல் 19 லட்சத்து 4 ஆயிரத்து 22 சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் பாறைக்கு சென்றுள்ளனர். தற்போது கடலில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் திருவள்ளுவர் சிலைக்கும் தினமும் சுற்றுலாப் பயணிகள் சென்று வர முடியும். இதனால் இந்த ஆண்டு மேலும் பல லட்சம் பேர் அதிகமாக விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.