மதுரை: பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், ஜல்லிக்கட்டு கிராமங்களில் காளைகளுக்கு கொம்பை வலிமையாக்க மண்ணிலும், உடலை வலிமையாக்க தண்ணீரிலும் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முந்தைய நாள் பயிற்சி கொடுத்து, அடுத்த நாள் காளைகளை அழைத்துச் செல்ல முடியாது. வீரமும், கோபமும், திமிரும், ஆக்ரோஷமும் கொண்ட காளைகளை ஆண்டுக்கணக்கில் தயார்படுத்த வேண்டும்.
இந்தக் காளைகளை மற்ற தொழில்களுக்கோ, தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது. ஒரு விளையாட்டு வீரனை எப்படி போட்டிக்கு தயார் படுத்துகிறோமோ, அதுபோல், பிரத்யேகப் பயிற்சி, தீவனங்கள் வழங்கி ஜல்லிக்கட்டு காளைகளை பராமரிக்க வேண்டும். அன்றாட பயிற்சிக்கும், வளர்ப்புக்கும், மருத்துவத்துக்கும் அதிக செலவாகும். இந்த காளைகள் வளர்ப்பில் பரிசுப்பொருட்கள் வேண்டுமென்றால் கிடைக்கலாமே தவிர, ஒரு பைசா வருமானம் கிடைக்காது.
அப்படியிருந்தும் அடித்தட்டு சாதாரண விவசாயி முதல் உயர்தட்டு மக்கள் வரை, மதுரை கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் வீட்டில் ஒருவராகவே செலவைப் பார்க்காமல் வளர்த்து வருகிறார்கள். அவர்களுடைய ஒரே நோக்கம், பொங்கல் பண்டிகை முதல் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை பங்கேற்க வைப்பது தான்.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் மதுரை கிராமங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜல்லிக்கட்டு காளைகள் பயிற்சியும், மாடுபிடி வீரர்கள் தயாராவதுமாக களைகட்டியுள்ளது. காளைகள் வளர்ப்பதிலும், மாடுபிடி வீரராகி காளைகளை அடக்குவதிலும் மதுரை இளைஞர்கள் கொண் டுள்ள ஆர்வம் ஆச்சரியப்பட வைக்கிறது.
மதுரை ஜல்லிக்கட்டு கிராமங்களில் வீட்டுக்கு ஒரு ஜல்லிக்கட்டு காளையாவது வளர்க்கிறார்கள். பொருளாதார நெருக்கடி, பராமரிப்பு, தொடர் பயிற்சி போன்ற பல்வேறு சிரமங்களை தாண்டி ஒரு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதே மிகப்பெரிய சிரமம். ஆனால், மதுரை அருகே குலமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.எம்.திருப்பதி என்பவர், கடந்த 12 ஆண்டுகளாக 25 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.
ஆரம்பத்தில் மாட்டுத் தொழுவத்தில் இந்த காளைகளை வளர்த்து வந்தார். தற்போது காளைகளை வளர்க்க, மிகப்பெரிய ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி பண்ணையை அமைத்துள்ளார். அந்த பண்ணையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மையம் அமைத்துள்ளார். மண்ணை குவியலாக அமைத்து, காளைகளுடைய கொம்புகளை குத்தி மோத விடுவது, நீச்சல் பயிற்சிக்கு பிரத்யேக நீச்சல் குளம், பழகுவதற்காக வாடிவாசல் போன்றவை அமைத்து ஆண்டு முழுவதும் பயிற்சி கொடுத்து வருகிறார்.
இதில் நீச்சல் குளத்தை மட்டுமே அவர் ரூ.30 லட்சத்தில் அமைத்துள்ளார். இந்த காளைகளை தொழிலாளர்களை கொண்டு பராமரிக்காமல், தனது குடும்பத்தில் உள்ளவர்களை ஆளுக்கு ஒரு காளை வீதம், இரவு பகலாக பராமரிக்கும் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்துள்ளார். நீச்சல் குளத்தை அடிக்கடி சுத்தம் செய்து தண்ணீர் மாற்றி காளைகளுக்கு பயிற்சி கொடுக்கிறார்.
இந்த ஜல்லிக்கட்டு காளைகள் பயிற்சிப் பண்ணையில், ஒவ்வொரு காளையையும் பராமரிக்க தனித்தனி இடம், காளைக்கு மேலே மின்விசிறிகள், நீச்சல் குளத்தில் பாதுகாப்பாக காளைகள் இறங்க பாதைகள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அமைத்துள்ளார். அவரது இந்த காளைகள், தற்போது மதுரை மட்டுமல்லாது வெளிமாவட்டங் களிலும் வெற்றி களை குவித்து வருகின்றன.
இதுகுறித்து கே.எம்.திருப்பதி கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டியை பொழுது போக்காக மட்டுமே பார்க்காமல் நமது பாரம்பரிய விளையாட் டாக கருதுகிறேன். எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்தே தலைமுறைகளை கடந்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறோம். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சத்துள்ள உணவுகளை கொடுப்பது மட்டும் போதாது. அவற்றுக்கு கடுமையான பயிற்சியும் அவசியம். நீச்சல் பயிற்சி தினமும் அவசியம் அளிக்க வேண்டும். அப்போதுதான் காளைகள் பிடிபடாமல் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.
மழை பெய்யாவிட்டால் கண்மாய்கள், குளங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி கொடுக்க முடியாது. அதனால் இந்த நீச்சல் குளத்தை கட்டியுள்ளேன். தீவனத்துக்காக என்னுடைய 10 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிர் வைக்கோல், சோளத் தட்டைகளை பயிரிட்டு காளைகளுக்கு வழங்குகிறோம்.
2009-ம் ஆண்டு ‘சால்னா' என்ற கன்றுகுட்டியை வாங்கி வளர்த்தோம். அந்த காளை வந்த பிறகே எங்கள் தொழில், பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றோம். பல போட்டிகளில் அந்த காளை கார் உள்ளிட்ட பரிசுகளையும் பெற்றுத் தந்துள்ளது. அந்த காளை இறந்த பிறகு, எங்கள் ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்திலேயே கல்லறை அமைத்து அடக்கம் செய்துள்ளோம். அதனை தற்போது வரை தெய்வமாக வழிபடுகிறோம்’’ என்றார்.