உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட மரப் பயிர்கள், தக்காளி, கத்தரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி வகைகள், மக்காச்சோளம், கம்பு, எள், கொண்டைக்கடலை உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
பிஏபி திட்டத்தின் மூலமாக, திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் பயன்பெறுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ.50 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது, தக்காளி அறுவடையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது.
இதைக் கண்ட இதர விவசாயிகளும் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டினர். அதன் விளைவாக, விலையேற்றம் கண்ட சில நாட்களிலேயே தக்காளி விலை சரிவை கண்டது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.20க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல், காளிஃபிளவர் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில் ஆண்டியகவுண்டனூர், மானுபட்டி, குட்டியகவுண்டனூர், கிளுவங்காட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், மடத்துக்குளம் வட்டாரத்தில் பாலப்பம்பட்டி, பாப்பான்குளம், மைவாடி, போளரப்பட்டி, குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட பெதப்பம்பட்டி, குடிமங்கலம், மெட்ராத்தி, பணத்தம்பட்டி, பூளவாடி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் தக்காளி மற்றும் காளிஃபிளவர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் செடிகள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேளாண் அலுவலர்களிடம் கேட்டபோது, "உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி, காளிஃபிளவர் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருவதால் இப்பயிர் சாகுபடி பரப்பை விவசாயிகள் குறைத்துள்ளனர். அந்த வகையில், தற்போது சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் மழையால் தக்காளி, காளிஃபிளவர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான். பாதிப்பு நிலவரங்கள் குறித்து முறையாக விவசாயிகளிடமிருந்து தகவல் கிடைத்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயி முருகானந்தம் கூறும்போது, "கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மழைப்பொழிவு சராசரியாக இருந்தது. அதை கணக்கில்கொண்டு, இந்த ஆண்டு சாகுபடி செய்தோம். ஆனால், மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஓர் ஏக்கருக்கு நாற்று, ஆள் கூலி, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட வகையில் ரூ.30000 வரை செலவு செய்துள்ளோம்.
அந்த வகையில் பயிர் சாகுபடிக்காக மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக செலவளிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு சில நாட்களே உள்ள நிலையில், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021-ல் பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தரவில்லை.
தனிப்பட்ட பாதிப்புக்கு கிடையாது என்றும், பிர்க்கா அளவில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே தர முடியும் என்றும் காப்பீட்டு நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன. அதன்பின், காப்பீடு செய்யும் முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது காப்பீடு இருந்தால் இழப்பீடு பெறலாம் என அதிகாரிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.