மானாமதுரை: மானாமதுரை அருகே கழைக்கூத்தாடிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டும் வீடு கட்டித் தராததால், தற்போது பெய்து வரும் மழைக்கு கூடாரத்தில் தங்க முடியாமல் வெளியேறினர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கங்கையம்மன் நகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 53 கழைக்கூத்தாடி குடும்பங்கள் வசித்து வந்தன.
இவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கயிறு மீது நடப்பது, தெருக்கூத்து போன்றவை மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள், தங்குவதற்கு வீடு மற்றும் சாதிச் சான்று உள்ளிட்டவை இல்லாமல் சிரமமடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மானுடவியல் ஆய்வாளர்கள் மூலம் கழைக்கூத்தாடிகள் குஜராத் மாநிலம், தொம்ரா இன மக்கள் என்பதை கண்டறிந்தார். தொடர்ந்து, அவர்களுக்கு சாதி சான்று வழங்கினார்.
சந்நிதி புதுக்குளம் பகுதியில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார். மேலும், அரசு திட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் வீடு கட்டித் தர தாமதமானதால், சந்நிதி புதுக்குளம் பகுதியில் துணிகள், சாக்கு பைகள் மூலம் கூடாரம் அமைத்து அவர்கள் குடியேறினர்.
அதன் பின்னர், கடந்த ஆண்டு முதற்கட்டமாக பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் 11 குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரப்பட்டன. ஆனால், அப்பகுதியில் மின்கம்பங்கள் இல்லாததால் அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்தாண்டு 11 குடும்பங்களுக்கு கலைஞர் இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மற்ற 31 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூடாரத்தில் வசிக்க முடியாமல் சில குடும்பங்கள் வெளியேறி மீண்டும் கங்கையம்மன் நகர் குடியிருப்பு பகுதியில் குடியேறினர். மற்றவர்கள் சிரமத்துடன் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து கழைக்கூத்தாடிகள் சிலர் கூறியதாவது: தற்போது, கூடாரங்களின் மேற்கூரையில் மழை நீர் கசிவதால், அங்கு தங்க முடியாமல் சில குடும்பங்கள் வெளியேறிவிட்டன. மேலும், கழிப்பறை வசதி இல்லாததால் சிரமப்படுகிறோம். மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் படிக்க முடியவில்லை.
கட்டிய வீடுகளில் மின்சார வசதி இல்லாததால் குடியேற முடியவில்லை. இன்னும் 31 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அனைவருக்கும் வீடுகள் ஒதுக்க வேண்டும். மின்சாரம், கழிப்பறை போன்ற வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.