கோவை: டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வி.கிருஷ்ணவேணி இன்று (டிச.18) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கோவை மாவட்டத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகளவில் பயிர் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதியளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 2,845 மெட்ரிக் டன், டிஏபி 676 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,466 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3,532 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,560 மெட்ரிக் டன் என போதியளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தென்னை மரத்துக்கு நீரில் கரையக்கூடிய வெள்ளை பொட்டாஷ் உரத்தை இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது பன்னாட்டுச் சந்தையில் டிஏபி விலை அதிகமாக உள்ளதால் அதற்கு மாற்றாக, கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ள சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சூப்பர் பாஸ்பேட் உரத்தினை எண்ணெய் வித்துப் பயிர்களில் டிஏபி உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும் போது, மகசூல் அதிகரிப்பதுடன், எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது. டிஏபி உரமானது மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், சூப்பர் பாஸ்பேட் உரம் டிஏபி உரத்தினை விட குறைவாகவே ஏற்படுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. அதேபோல், டிஏபி உரம் 50 கிலோ ரூ.1,350-க்கும், சூப்பர் பாஸ்பேட் உரம் 50 கிலோ ரூ.610, அம்மோனியம் பாஸ்பேட் உரம் 50 கிலோ ரூ.1,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.