அரியலூர்: அரியலூர் மாவட்டம் கரைவெட்டி, வெங்கனூர் கிராமங்களில் சம்பா நெல் நடவு செய்யப்பட்ட 25 நாட்களிலேயே கதிர் வந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு 20 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே டிச.12, 13 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் அரியலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டு, மழை நின்றதால் தற்போது வடிய தொடங்கியுள்ளது. இந்நிலையில், பருவமழை தாமதமானதால் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் குறைந்த நாட்கள் கொண்ட ரகங்களை பயிரிட்டனர்.
இதன்படி, கரைவெட்டி, வெங்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட பொன்னி ரக விதைநெல்லில் சில ரகங்கள் 25 நாட்களிலேயே கதிர் வந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு வரும் பொன்னி ரகம் என கடைகளில் விதைநெல் வாங்கி வந்து தெளித்து, நாற்றங்காலில் 30 நாட்கள் வளர்த்து நடவு செய்துள்ளனர்.
ஆனால், பயிர்கள் சரியாக வளராத நிலையில், நடவு செய்த 25 நாட்களிலேயே சிலவற்றில் கதிர்கள் வெளிவந்துள்ளன. அதேவேளையில், பயிர்கள் இன்னும் தூர் கட்டவில்லை. நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் முதல் களை பறிக்கப்படும் நிலையில், கதிர் வந்துள்ளதால் ஏக்கருக்கு (60 கிலோ வீதம்) 10 மூட்டைகள் கிடைப்பதேகடினம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே பிரச்சினை கடந்தாண்டு நேரிட்டபோது வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, விதை விற்பனை செய்த கடைகளில் இருந்து விதைக்கான தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்தனர்.
இந்நிலையில், நிகழாண்டும் அதேபிரச்சினை ஏற்பட்டுள்ளதால், வேளாண் அதிகாரிகள் தனியார் விதை விற்பனை நிலையங்களை முறையாக கண்காணிக்கவில்லையோ என விவசாயிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மேலும், இதுபோன்ற தரமற்ற விதைநெல் விற்பனையை தடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் அலுவலக அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.