மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போது உருவாகியுள்ளா புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கி தற்போது வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று டிசம்பர் 11ம் தேதி புதன்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பிறப்பித்துள்ளார்.
இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.