கன்னியாகுமரி ஆட்சியருக்கு... தெரு நாய் கடித்ததால் பாதித்த 9 வயது சிறுமி உருக்கமான கடிதம்!


தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி குமரி மாவட்ட ஆட்சியருக்கு 9 வயது சிறுமி எழுதிய கடிதம்.

நாகர்கோவில்: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி, தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி குமரி மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. ரேபிஸ் தடுப்பூசி போடப்படாத நாய்கள் அதிக அளவில் இருப்பதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

சமீபத்தில் தூத்தூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துக் குதறியது. இரணியல் பகுதியில் வெறிநாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் சுற்றி்த் திரியும் வெறிநாய்களால் பொதுமக்கள் உயிர் பயத்தில் நடமாடுகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமோ, நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நாகர்கோவில் புத்தேரி கணேஷ்நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி சக்தியை தெரு நாய் கடித்து விட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சிறுமி, தனக்கு ஏற்பட்ட பாதிப்பு வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற சீரிய நோக்கத்துடன் குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவுக்கு தனது கைப்பட உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

‘அம்மா’ என்று தொடங்கும் அந்த கடிதத்தில் சிறுமி சக்தி குறிப்பிட்டிருப்பதாவது: புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர் பகுதியில் வெறி நாய்கள் அதிகமாக உள்ளதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் வெறி நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். கணேஷ்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடந்த 8-ம் தேதி ஒரு வெறிநாய் என்னை கடித்து விட்டது.

என்னைப்போல் அவ்வழியாக செல்லும் மக்களையும் நாய் கடித்து வருகிறது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. என்னை கடித்தது போல் வேறு யாரையும் நாய் கடிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். 9 வயது சிறுமிய எழுதிய இக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x