திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெருவெள்ளத்தின்போது சேதமடைந்த இலவச, வேட்டி சேலைகள் குறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை உருவாகியது.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த அதி கன மழையின் போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டதில், ஆற்றங்கரையிலுள்ள ஆட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களினுள் வெள்ளம் புகுந்தது. ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் நாசமாகின.
பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த இலவச வேட்டி, சேலைகளும் நாசமாகின. இந்த மூட்டைகள், கடந்த ஓராண்டாக அங்கிருந்து அகற்றாமல் வட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகின. ஆனால், சமீபத்தில் பெய்த மழையில் இந்த இலவச வேட்டி, சேலைகள் நாசமானதாகவும், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதாகவும் தவறான தகவல் பரவியது. இது, மாவட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி வெளியிட்ட விளக்கம்: கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மாவட்டத்தில் 46 ரேஷன் கடைகள் மற்றும் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெள்ள நீர் புகுந்து சேதமடைந்தது. இருப்பில் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் சேதமடைந்தன.
இதுகுறித்து, முறையாக துறை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு முறைப்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய தணிக்கை அனுமதி பெற்ற பின்னர் அழிக்கும் பொருட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேட்டி, சேலைகளை அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளதை தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.