புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி மெய்யர். இவரது மகன் ஹரிஹரசுதன்(11). 6-ம் வகுப்பு படித்து வரும் இவரை, நவ.16-ம் தேதி பாம்பு காலில் தீண்டியது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரவில் சேர்க்கப்பட்ட ஹரிஹரசுதனுக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நீண்ட நேரம் ரத்தம் உறையாததால், கொடிய விஷம் கொண்ட பாம்பு தீண்டியிருக்கலாம் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து, விஷ முறிவு மருந்து அளிக்கப்பட்டு, ரத்தம் உறையாத பிரச்சினை சரி செய்யப்பட்டது.
பின்னர், பாம்பு காலில் தீண்டிய பகுதியில் திடீரென வீக்கம் ஏற்பட்டது. மருந்து அளித்தும் வீக்கம் நீண்ட நேரமாக குறையாததால், மருத்துவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து, உடல்நிலை சீராகி வந்த நிலையில், சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும், ரத்தம் குறைபாடு கண்டறியப்பட்டு, ஹரிஹரசுதனுக்கு 3 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 21 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ஹரிஹரசுதன் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னதாக, மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.கலைவாணி, இருக்கை மருத்துவ அலுவலர் இந்திராணி, குழந்தைகள் நல மருத்துவ துறைத் தலைவர் இங்கர்சால் உள்ளிட்டோருக்கு ஹரிஹரசுதனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைவாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உயர் சிகிச்சை வசதிகளைப் பயன்படுத்தியும், மருத்துவக் குழுவினரின் கூட்டு முயற்சியாலும் ஹரிஹரசுதன் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இதில், பாம்பு தீண்டியதுமே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்து சேர்த்த பெற்றோரின் நடவடிக்கை முக்கியமானது.
இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது என்றார்.