தமிழகத்திலேயே முதல்முறை: தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைகள் செவிப்புலன் பரிசோதனை திட்டம் தொடக்கம்


படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் செவிப்புலன் பரிசோதனை முன்னோடி திட்டத்தை கனிமொழி எம்பி இன்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் மற்றம் ஹியரிங் பார் லைப் பவுண்டேசன் இணைந்து மேற்கொள்ளும் பச்சிளம் குழந்தைகளுக்கான செவிப்புலன் பரிசோதனை முன்னோடி திட்டம் தொடக்க விழா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திட்டத்தை தொடங்கி, பச்சிளம் குழந்தைகளுக்கான செவிப்புலன் பரிசோதனை அறையை திறந்து வைத்து தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி பேசியதாவது: "தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைகள் செவிப்புலன் பரிசோதனைக்கான முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளன. உலகில் இன்னும் 20 ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 1000-ல் அறு பேர் செவித்திறன் குறைபாடுடன் இருக்கின்றனர்.

குழந்தைகள் பிறந்த உடனே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களுடைய செவித்திறனை மேம்படுத்த முடியும். எனவே, பிறக்கும் குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறும் பரிசோதனைக்கான சிறப்பு திட்டம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் அரசு தலைமை மருத்துவமனைகளில் தற்போது தொடங்கப் பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்த பரிசோதனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிறக்கும் குழந்தைகளில் காது கேளாமல் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உலக நாடுகளில் இருப்பதை விட 6 மடங்கு இந்தியாவில் அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிக குழந்தைகளுக்கு பிறவிலேயே காது கேளாத பாதிப்பு ஏற்படுகிறது. உறவுமுறை திருமணத்தின் காரணமாக இது போன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது. எனவே, தற்போது தொடங்கப் பட்டுள்ள பரிசோதனை திட்டத்தால் குழந்தைகளின் செவித்திறனை பரிசோதனை செய்வதன் மூலமாக வரும் காலங்களில் இங்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் யாருக்கும் செவித்திறன் குறைபாடு என்பது இருக்காது என்று எம்பி கனிமொழி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், சென்னை காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி மைய இயக்குநர் மோகன் காமேஷ்வரன், மாட்ட சுகாதார அலுவலர் யாழினி, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் (பொ) பொன்ரவி, அரசு மருத்துவமனை டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x