உதகை சுற்று வட்டார பகுதிகளில் கேரட் அறுவடை பணிகள் தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி


உதகை: உதகை சுற்றுவட்டார பகுதிகளில் கேரட் அறுவடை செய்வதில், விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு கேரட் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, உதகை, சோலூர், எம்.பாலாடா, நஞ்ச நாடு, அணிக்கொரை, துானேரி, கோத்தகிரி, குன்னுார் பகுதியில், பந்துமி மற்றும் கொலக்கம்பை பகுதிகளில் அதிக பரப்பளவில் கேரட் பயரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் கேரட் மகசூல் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ கேரட் மேட்டுப்பாளையம் மண்டிகளில் தரத்திற்கு ஏற்ப ரூ.70 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூர் கடைகளில் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களை காட்டிலும், கேரட் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் தோட்டங்களில், தண்ணீர் தேங்கி, அழுகிவிடும் வாய்ப்புள்ளது. இதனால், தயாரான கேரட்டை படிப்படியாக அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உதகை மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது கூறியதாவது: "உதகை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால், கேரட் வரத்து குறைந்துள்ளது. உதகை மண்டிகளில், 5000 முதல் 10 ஆயிரம் கிலோ வரை வரத்து உள்ளது. மாவட்டத்தில் மற்ற பகுதிகளை காட்டிலும், உதகை மார்க்கெட்டில், ஒரு கிலோ கேரட் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது" என்று கூறினார்.

x