கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பறவை போல் தோற்றமளிக்கும் ‘பேர்ட் ஆஃப் பாரடைஸ்’ மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான பிரையன்ட் பூங்காவில் ஆண்டு முழுவதும் பல்வேறு காலநிலைகளில் பூக்கும் பூச்செடிகள் ஏராளமாக உள்ளன.
இதை பார்த்து ரசிக்க ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது பிரையன்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ‘பேர்ட் ஆஃப் பாரடைஸ்’ செடியில் பூக்கள் மலர்ந்துள்ளன.
அவை ஆரஞ்சு, நீல நிற வண்ணத்தில் பறவை பறப்பது போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. இப்பூக்களை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறியதாவது: பேர்ட் ஆஃப் பாரடைஸ் வகை செடி தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் பூத்து ஒரு மாதம் வரை பட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் பூக்கும்.
கொடைக்கானலில் ஆரஞ்சு வண்ணத்தில் பூக்கும் செடி மட்டும் உள்ளது. ஒரு செடியில் ஒன்று முதல் 5-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். அவை பார்ப்பதற்கு பறவை பறப்பது போல் தோற்றமளிக்கும், என்று கூறினார்.