குன்னூர் மலை ரயிலில் பயணித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்


குன்னூர்: நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் பற்றி அறிந்து கொள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 14 பேர் ரூ.6 லட்சம் கட்டி குன்னூருக்கு சிறப்பு மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு கடந்தும் இன்றும் பொலிவு மாறாமல் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் உள் நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த 14 நபர்கள் மலை ரயிலை பற்றி அறிந்து கொள்ளவும், இங்குள்ள இயற்கை காட்சிகளை ரசிக்கவும் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். ரூ. 6 லட்சம் செலுத்தி வாடகைக்கு இந்த மலை ரயிலை தனியாக எடுத்து பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் குன்னூர் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே ஆற்றில் காந்தியின் அஸ்தி கரைத்த இடம், பசுமையான மலைகள் பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள், வளைந்து ஓடும் ஆறுகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் இந்த மலை ரயிலில் பயணம் செய்தது மறக்க முடியாத நினைவுகளாக இருந்ததாக வெளிநாட்டு பயணிகள் தெரிவித்தனர். பழமை வாய்ந்த பாலங்கள் மற்றும் இந்தியாவில் பல்சக்கரம் கொண்ட தண்டவாளங்களில் நடந்து சென்று அதனை பற்றி அறிந்து கொண்டனர். மீண்டும், மலை ரயிலில் ஏறி இவர்கள் குன்னூர் சென்றனர்.

x