திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடுகல் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம், திம்மாம்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நடுகல் ஒன்று இருப்பதை அறிந்த திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பிரபு தலைமையிலான சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், ஊராட்சிமன்ற உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் அந்த இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதில், சோழர் காலத்து நடுகல் ஒன்றை கண்டறிந்தனர்.
இது குறித்து, பேராசிரியர் முனைவர் பிரபு அளித்த பிரத்யேக தகவலில், "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றுப் படுகையில் அமைந்துள்ள திம்மாம்பேட்டை பகுதியானது திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையில் அமைந்த பழமையான பல வரலாற்றுத் தடயங்களை கண்டெடுத்த ஊராகும். பொதுவாகத் ‘திம்மம்’ என்றால் இரும்பு என்று பொருள். சோழர்கள் காலத்தில் அவர்களுக்கான போர்க்கள இரும்பு ஆயுதங்களைச் செய்து கொடுத்தவர்கள் ‘திம்மர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
சோழர்களுக்கு ஆயுதம் செய்து கொடுத்த திம்மர்கள், அவர்களை அடுத்து வந்த வேறு யாருக்கும் ஆயுதம் செய்து கொடுக்க விரும்பவில்லை என சொல்வார்கள். அவர்கள் வாழ்ந்த இடங்கள், திம்மர்குடி, திம்மஞ்சேரி என அழைக்கப்பட்டன. இந்த பெயர் கொண்ட ஊர்கள் இன்றும் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இந்த ஊர் பண்டைய சோழர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்பதாலும், தமிழக எல்லைப் பகுதி என்பதாலும் இங்கும் திம்மர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என தெரிகிறது.
ஆகையால் இந்த ஊருக்குத் திம்மாம்பேட்டை எனப் பெயர் வந்திருக்கலாம். அதற்குச் சான்றாக, இந்த ஊரில் கொல்லுப்பட்டறை எனும் இரும்பு வேலை செய்யும் மக்கள் இன்றைக்கும் அதிகளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரில் தனியாருக்குச் சொந்தமான விவசாயப் பட்டா நிலத்தின் மையத்தில் பழமையான நடுகல் ஒன்றினை எங்கள் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தோம். இந்த நடுகல்லின் ஓரங்கள் சற்றுச் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த கல்லானது தரைக்குமேல் 4 அடி உயரமும், 2 ½ அடி அலகமும் கொண்டதாக உள்ளது.
தரைக்குக் கீழ் 3 அடி வரை நடுகல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த நடுகல்லில் வீரனது வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் ஏந்திய நிலையில் உள்ளார். கல்லினைக் குடைந்து வீரனது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு வீரனது உருவத்திற்கு மேல்புறம் 8 வரிகள் கொண்ட தமிழ்க் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் உள்ள வரிகளில் எழுத்துக்கள் சிதைந்துள்ளதால் மாவுப்படியின் வாயிலாகப் படி எடுத்து வாசிக்கப்பட்டது. கூடுதல் விபரங்களுக்குத் தமிழகத்தில் முதுபெரும் கல்வெட்டு அறிஞர் முனைவர் ராசகோபால் அவர்களிடம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு வாரகால முயற்சிக்குப் பின் அவர் கல்வெட்டு வரிகளைத் தெளிவாக்கினார். அதில் உள்ள வரிகள் ‘‘ கோப்பரகேசரி பரு, [மர்]க்கி யாண்டு பன்னி, ரண்டாவது வல்லு[வ]பேடு நாட், டு . . ருந்து வாழும் பெருந்தட்டா, ன் . . கிபாகன் போடையன் காட்டுக்குளத்தூர் வழியில் கள்ளரை பிடித்து, மீண்டு[கி] பட்டான் இக்கல். . . [விழது] . . . நாட்டுவித்தான்’’ இவ்வாறு, அந்த கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
“பரகேசரி” என்ற பட்டமுடைய அரசனின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் இந்த நடுகல் கல்வெட்டு எடுக்கப்பட்டுள்ளது. வல்லுவப்பேடு நாட்டைச் சேர்ந்த “பெருந்தட்டான் பாகன் போடையன்” என்பவர் “காட்டுக்குளத்தூர்” என்ற ஊரின் வழியில் இரு கள்ளர்களைப் (திருடர்களை) பிடித்தபோது நடைபெற்ற சண்டையில் இறந்து போனார். அவருக்காக எடுக்கப்பட்டது இந்த நடுகல் ஆகும்.
பண்டைத் தமிழ் இலக்கண நூல்களில் சுட்டப்படும் புறத்திணைகளில் ஆநிரை கவர்தல், மீட்டல், ஆறலைத்தல் குறித்த நிகழ்வுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றின் எச்சமாக இந்த நடுகல் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் சென்றுவரும் மக்களைத் தாக்கிக் கொன்று அவர்களது உடமைகளைக் கவர்ந்த கள்வர்களை ஒடுக்க அவர்களோடு சண்டையிட்டு அவர்களைக் கொன்று தானும் மடிந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்த நடுகல் விளங்குகிறது. காட்டுக்குளத்தூர் என்ற ஊர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரில் ஆறலைக் கள்வர்களை ஒடுக்கிட நடைபெற்ற சண்டையில் வீரன் உயிர் விட்டதாகத் தெரிகிறது. திம்மாம்பேட்டை சுற்றுவட்டாரத்தில் ‘காட்டுக்குளத்தூர்’ என்ற பெயரில் தற்போது ஊர்கள் ஏதும் இல்லை. ஆனால் இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் ஆந்திர எல்லையின் மலையடிவாரத்தில் ‘காட்டுக்கொள்ளி’ என்ற இடமுள்ளது. அந்த ஊர் முன்பு காட்டுக்குளத்தூராக இருக்க வாய்ப்புள்ளது. ஆறலைத்தல் = வழிப்பறி செய்தல், ஆறலைத்தல் என்றால் வழிப் போவாரைத் தடுத்துத் துன்புறுத்துதல், வழிப்பறி செய்தல். பயணம் செய்வோரிடமிருந்து உணவு மற்றும் பொருள்களைக் கொள்ளையடித்தல் எனப் பொருள்படும்.
ஆறு + அலைத்தல் = ஆறலைத்தல். ஆறு - என்றால் வழி. அலைத்தல் - என்றால் வருத்துதல், துன்புறுத்துதல் ஆகும். அன்றைய வறண்ட பாலை நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் தொழிலாக ஆறலைத்தல் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. ‘பரகேசரி’ இரண்டாம் ராஜேந்திர சோழன் பரகேசரி என்ற பட்டம் கொண்ட மன்னருள் இரண்டாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தோடு இந்த நடுகல் கல்வெட்டு ஒத்துப் போகிறது. பல அரசர்கள் தங்களின் முக்கிய வெற்றிச் சிறப்பைக் குறிக்கும் தொடர்களைத் தங்கள் பெயருக்கு முன்னர்ச் சேர்த்துக் கொள்வது மரபாக இருந்துள்ளது.
அவை மெய்க்கீர்த்திகள் எனப்பட்டன. பொதுவாக பட்டங்கள் அரசனின் வெற்றிச் சிறப்பையும், ஆட்சிச் சிறப்பையும் கூறும். சோழ வம்சத்தில் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டம் கொண்டு ஆள்வது வழக்கமாய் இருந்து வந்தது. அதாவது ஒரு மன்னன் இராசகேசரி என்று பட்டம் கொண்டு ஆட்சி செய்தால், அதற்கு அடுத்து வரும் மன்னன் பரகேசரி என்ற பட்டத்தோடு ஆள்வான். அதற்கடுத்து வருபவர் இராசகேசரி என்று மாற்றி மாற்றி வைத்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் “பரகேசரி இரண்டாம் ராஜேந்திர சோழன்” தனது சகோதரன் ராஜாதி ராஜன் “ராஜகேசரி” எனும் பட்டம் கொண்டு ஆட்சி செய்தமையால் சோழர் குல வழக்கப்படி இரண்டாம் ராஜேந்திர சோழன் பரகேசரி எனும் பட்டம் கொண்டு ஆட்சி செய்தார். சோழப் பேரரசின் எல்லையை விரிவாக்கியவர்களுள் இவருக்கு மிக முக்கியமான பங்குண்டு. இவரது ஆட்சிக் காலத்தில் மேலைச் சாளுக்கியருடன் இரண்டாம் முறையாகப் போர் நிகழ்ந்ததை இவரது ஆட்சியில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. அதாவது கி.பி 1054ம் ஆண்டில் கொப்பத்தில் (குப்பம்) நடைபெற்ற போரில் அடைந்த அவமானத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு மேளைச்சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன், பெரும்படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு சோழர்களுடன் கடும் போர் புரிந்து தோற்றுப் போனார்.
அந்த வகையில் பார்க்கும் போது இக்கல்வெட்டு அவரது 12வது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டது என்பதால் இந்த நடுகல் கல்வெட்டு கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதாவது, ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் சோழர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இப்பகுதி விளங்கியது என்பதை விவரிக்கும் அரிய வரலாற்றுச் சான்றாகும். காலபோக்கில், இந்த நடுகல் உராயத்தொடங்கி அழிவுறும் நிலையில் உள்ளது. இந்த நடுகல் கல்வெட்டு மக்கள் வழிபாட்டில் இருப்பினும் பராமரிப்பு இன்றிச் சிதிலமடைந்து வருகிறது. ஆகவே இக்கல்வெட்டினை முறையாகப் பராமரிக்க அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாவட்ட நிர்வாகமும் வரலாற்று தடயங்களை ஆவணப்படுத்த முன்வர வேண்டும்” என்று முனைவர் பிரபு கூறினார்.