தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தலையணை பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். காட்டுக்குள் தங்கி வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு வெளியில் வீடு கட்டி தருவதாக கூறி, இப்பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரசால் கட்டி கொடுக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும், வீடு இல்லாமல் மண் குடிசையில் வசிப்பவர்களுக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ் கூறியதாவது: வாசுதேவநல்லூர் அருகே தலையணை பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மலைப் பகுதியில் வசித்த பழங்குடியின மக்கள் தலையணை பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, 15 குடும்பங்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு புதிதாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.
அந்த வீடுகளின் மேற்கூரை சேதமடைந்து மழை நீர் வீட்டுக்குள் கசிவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், வீடுகளின் தரைத்தளமும் சேதமடைந்து காணப்படுகின்றன. அந்த வீடுகளை சீரமைத்துதர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வாழும் 13 குடும்பங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்காததால் மண் சுவருடன் கூரை வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த மண் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். தங்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதியில் போதுமான மின்விளக்கு வசதிகளும் இல்லை. விஷ ஜந்துகள் மற்றும் விலங்குகள் நடமாடக்கூடிய பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அந்த பகுதியில் சிறு கோபுர மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தேன்.
அதற்கு பதிலளித்த வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சேதமடைந்த கான்கிரீட் வீடுகளை பராமரிக்கவும், 13 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும் நிர்வாக அனுமதி, நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். பழங்குடியின மக்களின் எதிர்பார்ப்புகளை விரைவில் பூர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.