புதுச்சேரி: தானத்தில் சிறந்த தானம் ‘கண் தானம்’ எனச் சொல்வார்கள். கண்தானம் செய்வதால், நாம் இறந்தாலும், மற்றொருவர் மூலம் நம் கண்கள் இந்த உலகை பார்க்க முடியும். இந்நிலையில் கண் தானத்தில் யூனியன் பிரேதசங்களில் புதுச்சேரி முதன்மையாக திகழ்கிறது.
இதுகுறித்து தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்ட இயக்குநர் டாக்டர் தணிகாசலம் நம்மிடம் கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு நவம்பர் வரை 4,895 ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயிக்கும் இலக்கை புதுச்சேரி எளிதாக எட்டி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு 550 கண்கள் தானமாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் தற்போது வரை 675 கண்கள் தானமாக பெறப் பட்டுள்ளன.
குறிப்பாக இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளில் 509 ஜோடி கண்கள் தானம் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டிலேயே யூனியன் பிரதே சங்களில் புதுச்சேரி முதன்மையாக மாநிலமாக திகழ்கிறது. நாங்கள் ஒவ் வொரு பள்ளி, கல்லூரியாக சென்று கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். புதுவை அரசும் கண் தானம் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் சமூக நலத்துறை மூலம் கண் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தனி யாக செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகை யில், கண் தானம் பெறும் பணிக்காக அரசு மருத்துவமனையில் கிரீன் கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தான் மருத்துவமனையில் உயிரிழக்கும் தருவாயில் இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொண்டு குடும்பத்தினரிடம் பேசி, கண் தானம் பெற முயற்சி மேற்கொள்கின்றனர்.
இதன் மூலம் நமக்கு நிறையகருவிழிகள் தானமாக கிடைக்கின்றன. இதேபோல், கண் வங்கியில் உள்ள குழுவினரும், வீடுகளுக்கே சென்று இறந்தவர்களிடமிருந்து கண் தான சேகரிப்பு பணியில் ஈடு படுகின்றனர். கண் வங்கிகளின் பணி இதில் மிகவும் முக்கியமானது. புதுச்சேரியை பொருத்தவரையில் கண் தானம் பெறுவதில் அரசு, தனியார் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம்.
எல்லா வயதினரும் கண் தானம் செய்யலாம். கண் அறுவை சிகிச்சை செய்தவர், கண் கண்ணாடி அணிந்த வர், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்தானம் செய்யலாம். ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கண்தானம் செய்யலாம். உடலில் மற்ற உறுப்புகளில் கேன்சர் வந்து இறந்தவர்களும் கண்தானம் செய் யலாம். கருவிழி அகற்றிய பின் முகத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. 10 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு கருவிழி ஆரோக்கியமானதாகவும், தரமானதாகவும் இருக்கும். இது நல்ல பார்வைத் திறன் கிடைக்கும். விபத்து, தற் கொலை போன்ற இளம் வயதில் இறந்தவர்களின் கண்கள் மிகுந்த தரமானதாக இருக்கும். ஆனால் அது கிடைப்பது என்பது சற்று குறைவுதான்.
இந்தியாவில் 12 லட்சம் பேர் கருவிழி பாதிப்பால் கண் பார்வை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க கண் தானம் செய்ய வேண்டும். அனைவருக்கும் கண் பார்வை கிடைக்க ஆண்டுக்கு 1 லட்சம் கருவிழி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இதற்கு 2 லட்சம் கருவிழிகள் தானமாக பெற வேண்டி இருக்கிறது. நாம் தானமாக பெறும் கருவிழி களில் 50 சதவீதம் கருவிழிகள் தான் தரமானதாக மதிப்பீடு செய்யப்பட்டு கண்களில் பொறுத்த முடிகிறது. மீதமுள்ள 50 சதவீதம் பொருந்தாது. ஆனால் அவையும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கருவிழி அறுவை சிகிச்சைதான் செய்யப்படுகிறது. இறப்பு அதிகமாக இருந்தாலும், அதில் 2 அல்லது 3 சதவீதம் பேர்தான் கண்தானம் செய்கின்றனர். விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே கண்தானம் செய்யும் நிலை உள்ளது. எனவே இதற்கான சட்டத்தில் அரசு சில திருத்தங்களை கொண்டுவந்தால் அதிகமாக கண் தானம் பெற வாய்ப்புள்ளது. தற்போது கண் தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.