சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக குமுளியில் நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பு பணி தீவிரம்


விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நேந்திரம் சிப்ஸ்.

குமுளி: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக குமுளியில் நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பு பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது. சபரிமலை ஐயப்ப பக்தர் களுக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இதன் வழியே தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநில பக்தர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

மாவட்டத்தின் எல்லையான குமுளியில் இருந்து கேரளா மாநிலம் தொடங்குகிறது. இங்கு தேக்கடி, வாகமண் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்காக குமுளியில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது சபரிமலையில் மண்டல கால பூஜை நடைபெற்று வருவதால், ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தரிசனம் முடிந்து திரும்பும் இவர்கள் நேந்திரம் சிப்ஸ் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.இதனால் நேந்திரம் சிப்ஸ் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து கூடுதல் ஆட்களை நியமித்து பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் சிப்ஸ் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 5, 10, 25 கிலோ என்று பல்வேறு எடைகளில் பேக்கிங் செய்து கிட்டங்கியில் இருப்பு வைத்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய்யில் பொரித்த சிப்ஸ் கிலோ ரூ.320-க்கும், பாமாயிலில் பொரிக்கப்பட்ட சிப்ஸ் கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குமுளி பேருந்து நிலையம் அருகே மட்டும் அதிகளவில் சிப்ஸ் கடைகள் இருந்து வந்தன. தற்போது குமுளியின் புறநகரான குளத்துப்பாலம், கொல்லம்பட்டறை, கேரள அரசுப் பேருந்து பணிமனை, ஸ்பிரிங்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிப்ஸ் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து குமுளி சிப்ஸ் வியாபாரிகள் சிலர் கூறுகையில், இங்கு விற்பனை செய்யப்படும் நேந்திரம் சிப்ஸ், அல்வாவுக்கு தனிச் சுவை உள்ளது. ஆண்டுக்கொரு முறை சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் கிலோ கணக்கில் சிப்ஸ் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தேவை அதிகரித்துள்ளதால் சிப்ஸை அதிகளவில் தயாரித்து குடோன்களில் இருப்பு வைக்க தொடங்கியுள்ளோம் என்று கூறினர்.

x