திருமலையில் பிடிபட்ட 8 அடி நீள நாக பாம்பு: பக்தர்கள் பீதி


திருமலையில் பிடிபட்ட 8 அடி நீளமுள்ள நாக பாம்பு.

திருப்பதி: திருமலையில் 8 அடி நீளமுள்ள நாக பாம்புவை வனத்துறையினர் பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

திருமலையில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இதில் சிறுத்தை தாக்கி கடந்த ஆண்டு 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனை தொடர்ந்து சுமார் 9 சிறுத்தைகளை தேவஸ்தான வனத்துறையினர் பிடித்து திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வனவிலங்கு பூங்காவில் ஒப்படைத்தனர். ஆனால், திருமலையில் பல இடங்களில் அடிக்கடி பாம்புகளும் சுற்றி திரிவதை கண்டு பக்தர்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று செவ்வாய் கிழமை மாலை நேரம் திருமலையில் உள்ள ரிங்-ரோடு, பி-டைப் குடியிருப்புப் பகுதி அருகே நாக பாம்பை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து பீதி அடைந்தனர். உடனே இது குறித்து திருமலை வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் வனத்துறை ஊழியர் பாஸ்கர் நாயுடு என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 8 அடி நீளமுள்ள நாக பாம்பை பிடித்தார். அதனை, மீண்டும் அவர் அவ்வாகோனா வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக திருமலை பகுதியில் பாம்புகள் அடிக்கடி தென்படுவதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

x