திருநெல்வேலி: 20 ஆயிரம் லிட்டர் வாழை தண்டு ஜூஸ் தயாரித்தால் ரூ.25 லட்சம் வரையில் வருவாய் ஈட்ட முடியும் என்று தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் தெரிவித்தார். ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வாழ வைக்கும் வாழை எனும் பயிற்சி கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் பேசியதாவது: இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது. நாம் 10 லட்சம் ஹெக்டேர் வாழை சாகுபடி செய்து 37 மில்லியன் டன் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். ஆனால் 3 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம். ஒரு ஏக்கர் பூவன் வாழை தண்டிலிருந்து 20 ஆயிரம் லிட்டர் ஜூஸ் எடுக்கலாம். 200 மில்லி ஜூஸை ரூ.25-க்கு விற்கிறோம். 20 ஆயிரம் லிட்டர் ஜூஸ் மூலம் ரூ. 25 லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும்.
இந்த ஜூஸ் 6 மாதம் வரை கெட்டுப்போகாது. மேலும் சிறுநீரக கல்லை கரைக்க இது உதவுகிறது. இது போல வாழைப்பூ, வாழைக்காய் என அனைத்தையும் மதிப்பு கூட்டலாம் என்று தெரிவித்தார். மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி முகா பேசும்போது, ‘‘வாழை யில் அனைத்து பாகங்களையும் மதிப்பு கூட்ட முடியும். இதன் மூலம் சிறு விவசாயிகள் கூட தொழில் முனைவோர் ஆக முடியும்’’ என்று தெரிவித்தார்.
முன்னோடி விவசாயி சியாமளா குணசேகரன் பேசியதாவது:எந்தவொரு தொழில் செய்பவரும் தான் உற்பத்தி செய்வதை குறைந்த விலைக்கு விற்பதில்லை. ஆனால் விவாசயிகள் மட்டுமே தாங்கள் உற்பத்தி செய்ததை குறைந்த விலைக்கு விற்கும் சூழல் உள்ளது. இதிலிருந்து வெளி வர வேண்டும் என நினைத்து வாழை சார் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தொடங்கினேன்.
நமது தோட்டத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறது. பண்ணையில் கிடைக்கும் அருகம்புல் எடுத்து ஜூஸ் தயாரித்து கொடுத்தால் காசு, குப்பை மேனியை சோப் செய்து கொடுத்தால் காசு. ஒரு காலத்தில் எனது தோட்டத்தில் தென்னை மரங்களை வெறும் ரூ.5 ஆயிரத்துக்கு குத்தகைக்கு கொடுத்தேன். ஆனால், இப்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்து ஒரு கிலோ சோப் தயாரித்து ரூ.800-க்கு கொடுக்கிறோம் என்றார்.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளான கற்பகம், சுரேஷ்குமார், ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சேவைகள் குறித்து விளக்கம் அளித்தனர். வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் மற்றும் வாழை நாரால் ஆன 150-க்கும் மேற்பட்ட கைவினை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வாழை விவசாயிகளுக்கும் வாழை சார் தொழில் முனைவோருக்கும் ‘சிறந்த வாழை விவசாயி ’ விருது வழங்கப்பட்டது.