சென்னை: திருவான்மியூர் முதல் ஈஞ்சம்பாக்கம் வரையிலான ஈசிஆர் சாலை (கிழக்கு கடற்கரை சாலை) முற்றிலும் சிதிலமடைந்து aஉயிர் பலி வாங்க காத்திருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே, பெரிய அளவிலான விபத்து ஏதேனும் நிகழும் முன்னர் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இசிஆர் சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. இதற்கு வசதியாக சாலையோரம் இருந்த ஏராளமான வீடுகள், கடைகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. அதோடு சாலையோரம் மழை நீர் வடிகால்வாய், சாலை நடுவே தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் வரையில் கிழக்கு கடற்கரை சாலை தற்போது முற்றிலும் சிதிலமடைந்து பல்லாங்குழி சாலையாக காட்சி அளிக்கிறது.
இந்த சாலையை தினமும் பல ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். சாலையோரம், நடுவில் என அடுத்தடுத்து சிறிதும், பெரிதுமாக ஏராளமான பள்ளங்கள் பல்வேறு வடிவங்களில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது.
வாகன ஓட்டிகள் கவனத்துடன் ஓட்டினால் கூட வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இச்சாலை வழியாக இருசக்கரம், ஆட்டோ மற்றும் கார் மூலம் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். குறிப்பாக இச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெற்றோர் அவ்வப்போது பள்ளத்தில் நிலை குலைவதை காண முடிகிறது.
சிலர் சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, பெரிய அசம்பாவிதம் நிகழும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டி குமரேசன் கூறும்போது, ‘ஈசிஆர் சாலையை தினமும் பயன்படுத்துகிறேன். தற்போது சாலை விரிவாக்கம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் வாகன நெரிசல் குறையும். அப்பணி முடியும் வரை புதிய சாலை அமைக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தற்போது உள்ள சாலை பள்ளங்களில் கட்டிட கழிவுகளையோ, தார் மற்றும் சிமெண்ட் கலவைகளையோ கொட்டி தற்காலிகமாக சீர் செய்யலாம்.
பகல் நேரங்களில் கூட இந்த சாலையை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இரவு நேரத்தில் இச்சாலையை பயன்படுத்துவது வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்காது. எனவே, பெரிய அளவிலான விபத்து உயிரிழப்புகள் ஏற்படும் முன் இசிஆர் சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்ய வேண்டும்’ என்றார்.