வாணியம்பாடி அருகே 250 ஆண்டுக்கு முந்தைய ராமாயண ஓலைச் சுவடிகள் கண்டெடுப்பு


திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 250 ஆண்டுகளுக்கு முந்தைய ராமாயண ஓலைச்சுவடிகள் முதல் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன் காந்தி தலைமையில், காணி நிலம் முனுசாமி, சித்த வைத்தியர் சீனிவாசன் மற்றும் முனைவர் காமினி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இராமாயண ஓலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, முனைவர் மோகன் காந்தி கூறியதாவது, ”திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் கணினித் துறையில் 3ம் ஆண்டு கல்வி பயிலும் மோனிஷ் என்ற மாணவர் தன்னுடைய பாட்டியிடம் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் இருப்பதாகக் கூறினார். இந்த தகவலைக் கொண்டு, வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியிலுள்ள வன்னிய அடிகளார் நகரில் வசித்து வரும் ஓய்வுப் பெற்ற ஆசிரியை எழில் அம்மையாரை நேரில் சந்தித்தோம். அவர் சேகரித்து வைத்திருந்த 5 கட்டு ஓலைச்சுவடிகளை எங்களுக்கு காட்டினார்.

இந்த ஓலைச்சுவடிகள் ராமாயண ஓலைச்சுவடிகளாகும். 5வது கட்டு ஓரளவிற்கு வாசிக்கப்பட்டது. அந்தக் கட்டில் மொத்தம் 419 ஏடுகள் இருந்தன. ஏட்டின் இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏடும் சுமார் 1.36 அடி நீளமும், 0.13 அடி அகலமும் கொண்டுள்ளன. ஏடுகளின் இடையில் இரு துளைகள் இடப்பட்டுள்ளன. முன்னும் பின்னும் சுவடிக்கு மேல் கட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.

முகப்புக் கட்டையில் "விறப்பதம்ம கவடன் பெஞ்சாதி நரசம்மாள் எழிதினது" என அதில் குறிப்பிடப்படுள்ளது. ஒவ்வொரு ஏட்டிலும் பக்கத்திற்கு 7 முதல் 8 அடிகள் எழுதப்பட்டுள்ளது. ஓர் அடியில் 49 முதல் 52 எழுத்துகள் வரை எழுதப்பட்டுள்ளன. சுவடியில் இராமாயணத்தின் உரைநடைப் பகுதித் தொடர்ச்சியாக உள்ளது. ராமர்- லட்சுமணன் தும்பன், நிதும்பனைப் போர்க்களத்தில் கொன்ற செய்தியை இராவணனுக்குத் தெரிவிப்பதில் இருந்து இந்த ஓலைச்சுவடி தொடங்குகிறது.

ஒவ்வொரு ஏட்டிலும் இடது ஓரம் இடம் விட்டு எழுதப்பட்டுள்ளது. ஏடுகளின் முகப்புப்பக்கந்தோறும் 'நன்றாக' என்ற சொற்றொடருடன் பக்க எண் தமிழ் எண்ணாகத் தரப்பட்டுள்ளது. ஏடுகள் சற்றே ஒடியும் நிலையில் உள்ளன. ஏறத்தாழ இருபது ஏடுகளின் இடது பக்கத்தின் கீழ்ப்பகுதி ஓரம் ஒட்டி க்கொண்டும் உடைந்தும் காணப்படுகின்றன. இந்த ஓலைச்சுவட்டின் எழுத்தமைதி இரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஓலைச் சுவடியின் இறுதி சுவடான 419 ஏடு, இந்த ஓலைச்சுவடி எழுதப்பட்ட சூழலை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

"வீறப்பகவுண்ட குமாறன் தம்ம கவுண்டன் பெஞ்சாதி னரசம்மாள் எழிதிவித்தது. கலியாண புதுப்பேட்டையிலிருக்கும் வேலாயுத முதலியார் குமாரராகிய வாத்தியார் கோவிந்தராச முதலியார் கையி சுத்தலிகிதம் யிந்த புறாணம் யெடுத்து படித்த பேர்கள் யென்னா தப்பு பிழையிருந்தாலும் பொறுத்துக் கொண்டு துகுத்துவிடவும் ஆக பொஸ்த்தம் - 65 - சதாகாண்டம் யேழு ஆல்பொல் தழைத்து அறுகுபொல் வேறோடி மூங்குல் போல் சுத்தம் முசியாமல் வாழந்திப்பார் வேலும் மயிலும் துணையுண்டாகவும் ஸ்ரீமதே றாமாயண சேயானமா ஸ்ரீறாமசெயம் உண்டாகவுறு" என அதில் முடிக்கப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் எழுதுவதற்கு வெள்ளைத் தாள்கள் பயன்படுவதற்கு முன்பாக ஓலைச்சுவடிகளே வழக்கில் இருந்தன. மாதவி கோவலனுக்கு பனை மடலால் கடிதம் எழுதியதை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார். உ. வே. சாமிநாதையர் உள்ளிட்டோர் ஓலைச்சுவடிகளை ஊர், ஊராகச் சென்று சேகரித்து, பழந்தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 250 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைச்சுவடிகள் வாயிலாக இராமாயணம் வழக்கில் இருந்ததை இந்த 5 ஓலைச்சுவடிக் கட்டுகள் மூலம் நாம் அறிய முடிகிறது.

இந்த ஓலைச்சுவடிகளில் இருந்த எழுத்துக்களைப் பல நாட்கள் செலவு செய்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் வே.நெடுஞ்செழியன் எங்களுக்கு வாசித்தார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இராமாயண ஓலைச்சவடிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும்”. என்று மோகன் காந்தி கூறினார்.

x