இனி இஷ்டத்துக்கு கட்டணம் இல்லை... புதுச்சேரியில் வருகிறது அரசின் ‘ஆட்டோ ஆப்’


புதுச்சேரி: சுற்றுலா நகரான புதுச்சேரிக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதியில் இதன் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கார்களில் பலர் வந்தாலும், புதுச்சேரிக்குள் வந்தவுடன் வாடகை இருசக்கர வாகனங்களில் வலம் வந்தாலும் ஆட்டோவை நாடுவோர் அதிகம் உள்ளனர்.

அரசு தரப்பில் போதியளவு வாகன வசதி அதிகம் இல்லை என்பதால் ஆட்டோவின் தேவை இன்றைக்கும் மிக முக்கிய அளவில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த ஆட்டோ கட்டணத்தை இஷ்டத்துக்கு பலரும் வசூலிக்கின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி போக்குவரத்து துறையானது ஆட்டோ கட்டணங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. 1.8 கிமீ தொலைவுக்கு குறைந்தபட்சம் ரூ.35 என நிர்ணயித்தது. இதை ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கவில்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோல் உயர்வை காட்டி இஷ்டத்துக்கு பலரால் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

"இங்குள்ள ஆட்டோக்களில் மீட்டர் இல்லை. ஆளுக்கு தகுந்தாற்போல் இஷ்டத்துக்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். கட்டணத்தை போக்குவரத்துத்துறை முறைப்படுத்தினால் பலரும் ஆட்டோவில் பயணிப்போம். பலருக்கும் ஆட்டோ தேவையாக உள்ளது" என்று புதுச்சேரிக்குள் வருவோர் தெரிவிக்கின்றனர். உள்ளூர் மக்களின் கருத்தும் இவ்வாறாகவே இருக்கிறது.

ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் கூறுகையில், "சரியான கட்டணத்தை அரசு நிர்ணயிக்கவில்லை. நகரப் பகுதியில் இருசக்கர வாகன வாடகை விடும் கடைகள் அதிகமாகவுள்ளன. அரசு அதை முறைப்படுத்தவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், ஆட்டோக்களை தேடுவது குறைந்துள்ளது. இதனால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம்" என்று தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை குறித்து ஏஐடியூசி தொழிற்சங்க புதுச்சேரி பொதுச்செயலர் சேதுசெல்வத்திடம் கேட்டதற்கு, "வெளிமாநிலங்களில் இருப்பது போல் கட்டணத்தை முறைப்படுத்த ‘ஆட்டோ ஆப்’ (மொபைல் செயலி) தொடங்க போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தியிருக்கிறோம். இதற்கான பணிகள் நடக்கின்றன.

ஆப் மூலம் கட்டணம் தெரிந்து விடும். இதனால் பேரம் பேச வேண்டியிருக்காது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைச் செலுத்தி, குறிப்பிட்ட இடத்துக்கு பயணிக்கலாம். நாம் வீட்டில் இருந்து செல்ல இருக்கும் கட்டண விவரம் ஆப்பில் தெரிந்து விடும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களும் அதிகளவில் ஆட்டோவை பயன்படுத்துவர். ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு உரிய வருவாய் கிடைக்கும்" என்றார்.

இதுபற்றி புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார் கூறுகையில், "ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் உள்ளது போல் ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி வருகிறோம். டிசம்பர் 31-ம்தேதிக்குள் இதை அமல்படுத்த முயற்சித்து வருகிறோம். தனியார் இரு சக்கர சேவை வாகனங்களை போக்குவரத்துத்துறையின் உரிய உரிமம் பெறாமல் வாடகைக்கு விட்டால், மோட்டார் வாகன சட்டம் 1089-ன் படி பறிமுதல் செய்து குற்ற வழக்கு தொடர்வோம்" என்றார்.

x