வாழ முடியாத நிலையில் வாழக்கொள்ளி பழங்குடியினர் @ நீலகிரி


வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை பழுதானதால் போர்த்தப்பட்ட பிளாஸ்டிக் போர்வையும் கிழிந்துள்ளது.

பந்தலூர்: வாழக்கொள்ளியில் அரசின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், வாழ முடியாத நிலையில் இருப்பதாக பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா வாழக்கொள்ளி பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த 25 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 2 அறைகளுடன் கூடிய தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

ஆனால், போதிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் தற்போது அவை பழுதடைந்து காணப்படுகின்றன. சில வீடுகளுக்கு கதவுகள், ஜன்னல்கள் அமைத்து தராததால், மூங்கில்கள் மூலம் கதவுகள் அமைத்திருந்தோம். தற்போது அவையும் உடைந்து விட்டன. மூங்கில்கள் வெட்டத் தடை உள்ளதால் கதவு, ஜன்னல்கள் அமைக்க முடியாமல் சிரமப்படுகிறோம்.

பந்தலூர் அருகே தேவாலா வாழக்கொள்ளி கிராமத்தில்
பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படும் பழங்குடியினரின் வீடு.

சுவர்கள் பழுதடைந்து, பலவீனமாக காட்சியளிப்பதால் எப்போது உடைந்து விழுமோ? என்ற அச்சமான சூழலில் வசிக்கிறோம்.
ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் உடைந்து, மழைக்காலத்தில் வீடுகளுக்குள் மழை நீர் கசிகிறது. கூரைகளில் பிளாஸ்டிக் பேப்பரைக் கொண்டு போர்த்தினாலும், காற்றுக்கு அவையும் கிழிந்து விடுகின்றன.

கழிவறை கதவுகள் அமைத்து கொடுக்கவில்லை. உரிய தண்ணீர் வசதி, கழிவுநீர் தொட்டி போன்ற எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் கழிப்பிடங்கள் பயன்படுத்த இயலாமல் உள்ளன. எங்களுக்கு வீடுகள் கட்டித் தர பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றனர்.

இதுதொடர்பாக நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘பழங்குடியினர் வீடுகளை பழுது பார்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சமர்ப்பித்து, நிதி ஒதுக்கப்பட்டதும் பராமரிப்புப் பணிகள் தொடங்கும்’’ என்றனர்.

x