சிறுமழைக்கே வெள்ளக்காடாக மாறும் ஈரோடு நகரம் - அச்சத்தில் பொதுமக்கள்


ஈரோடு நகரில் மழைக்காலங்களில் பிரதான சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறியுள்ள ஈரோடு நகரின் சில முக்கிய சாலைகள்.

ஈரோடு: ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகள், சிறு மழைக்கே வெள்ளக்காடாக மாறி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில், மழை நீருடன், கழிவு நீரும் கலந்து தேங்குவதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் பெருந்துறை சாலை, மேட்டூர் சாலை, சத்தியமங்கலம் சாலை, காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈவிஎன் சாலை, கடைவீதி ஆகியவை முக்கிய சாலைகளாக விளங்குகின்றன.

இந்த சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் அதிக அளவில் இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு நகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில நிமிடங்கள் பெய்யும் மழைக்கே, பிரதான சாலைகள் வெள்ளக்காடாகி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து பெரியார் நகரைச் சேர்ந்த சரவணன் கூறியதாவது: ஈரோடு நகரில் சில நிமிடங்கள் மழை பெய்தாலே, பள்ளிகள், மருத்துவமனைகள், ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள், அதிக போக்குவரத்து உள்ள முக்கிய சாலைகளில், வெள்ள நீர் தேங்கி விடுகிறது.

ஈரோடு காந்திஜி சாலையில் ஓடை மேம்பாலம், ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் வீரப்பன்சத்திரம், அரசு மருத்துவமனை பகுதி, மீனாட்சி சுந்தரனார் சாலை மேம்பால பகுதி, ரயில் நிலைய சாலை, கடைவீதி ஆகியவற்றில் தேங்கும் மழைநீரால் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் செல்லும் பாதைகளில் வெள்ள நீர் தேங்குவதால், பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பல இடங்களில் சாக்கடைகள் நிரம்பியும், பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்தும் மழை நீர் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் சாலைகளில் உள்ள பள்ளங்கள், மழை நீரால் தெரிவதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இத்துடன், கே.கே.நகர் மற்றும் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்குவதால், வாகனப்போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற மழை நீர் தேங்கும் இடங்களில் அவற்றை அகற்ற மாநகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால், மழை ஓய்ந்து பல மணி நேரம் ஆகியும் வெள்ளத்தின் பாதிப்பை அனுபவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச் சந்தைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மழைகாலங்களில் காய்கறிச்சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுவதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியை, ‘மாஸ் கிளீனிங்’ என்ற பெயரில், ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

ஆனால், பெரும்பாலான இடங்களில், தூர் வாரப்பட்ட சாக்கடைக் கழிவுகள், அப்பகுதிகளில் இருந்து அகற்றப்படாததால், அவை மீண்டும் சாக்கடையில் விழுந்து தற்போது அடைப்பை ஏற்படுத்தி வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகள் பல இடங்களில் முழுமை அடையாததும், சரியான திட்டமிடல் இல்லாததும் வெள்ள பாதிப்புக்கு காரணமாக பொதுமக்கள் கூறுகின்றனர். சிறுமழைக்கே அதிக வெள்ள நீர் தேங்கும் குறிப்பிட்ட பிரதான சாலைப் பகுதிகளிலாவது, வடிகால் வசதியை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என எதிர்பார்க்கின்றனர் ஈரோடு மக்கள்.

x