சிறகு உடைந்த ஆந்தைக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை - முதல் முறையாக சாதித்த மதுரை அரசு கால்நடை மருத்துவர்கள்


படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரையில் சிறகு உடைந்த ஆந்தைக்கு, கால்நடை மருத்துவர்கள் முதல் முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, அதனை மீண்டும் பறக்க வைக்க உதவியுள்ளனர்.

மதுரை விஸ்வநாதபுரம் திருவள்ளுவர் காலனியில் ஆந்தை அடிப்பட்டு கீழே கிடந்தது. விலங்குகள் நல ஆர்வலர்கள், அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த ஆந்தை பறக்க முடியாமல் அதன் இறகு பகுதி எலும்பு இரண்டாக உடைந்து காணப்பட்டது. பறக்க முடியாமல் தவித்த ஆந்தையை, வனத்துறையினர் சிகிச்சைக்காக தல்லாக்குளம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆந்தையின் அடிப்பட்ட பகுதியை எக்ஸ் ரே எடுத்து பரிசோதனை செய்து பார்த்தபோது, அதற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மீண்டும் அதனால் பறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கால்நடை மருத்துவமனை மருத்துவர் சரவணன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் மெரில்ராஜ், கலைவாணன், முத்துராம் அடங்கிய மருத்துவக் குழுவினர், இறக்கை உடைந்த ஆந்தைக்கு எலும்பு முறிவு அறுவை சி்கிச்சை மேற்கொண்டனர். சுமார், 2 மணி நேரம் மிக நுட்பமாக இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஒரு சில நாட்களில், ஆந்தை வழக்கம்போல் பறக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இது குறித்து கால்நடை மருத்தவர் மெரில்ராஜ் கூறுகையில்,”ஆந்தையின் தோள்பட்டைக்கு கீழே இறக்கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இரு துண்டாக எலும்பு உடைந்து காணப்பட்டிருந்தது. பறவைகள் எலும்பு, விலங்குள், மனிதனின் எலும்பை போன்று பலமாக இருக்காது. காற்று போகக்கூடிய அறைகள் போன்ற பறவைகள் எலும்பு காணப்படும். இந்த எலும்பு அமைப்புகளாலே பறவைகளால் பறக்க முடிகிறது. இது இல்லாத மனிதன், விலங்குகளால் பறக்க முடியவில்லை.

அடிப்பட்ட ஆந்தை 400 கிராம் எடை இருந்தது. மயக்க ஊசிப்போட்டு எப்பாக்ஸி புட்டி ( Epoxy Putty) என்ற முறையில் எலும்பு அறுவை சிகிச்சை மூலம் உடைந்த எலும்புகள் சரி செய்யப்பட்டன. உடைந்த எலும்பின் மேல் பகுதியில் இரண்டு பின், கீழ் பகுதியில் இரண்டு பின் போட்டு ‘எல்’ வடிவத்தில் இணைக்கப்பட்டன.

பிளேட், ஸ்குரூ போட முடியாது. அதனாலே, பின் போட்டு எலும்புகள் இணைக்கப்பட்டன. பொதுவாக இதுபோன்ற அறுவை சிகிச்சைகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், ஆராய்ச்சிகளிலுமே மேற்கொள்ளப்படும். மதுரை கால்நடை மருத்துவமனைகளில் முதல் முறையாக ஒரு பறவைக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று மெரில்ராஜ் கூறினார்.

x