உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரத்தில் பச்சை மிளகாய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், சாகுபடி செய்த விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டாரங்களுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 400 ஏக்கரில் பச்சை மிளகாய் சாகுபடி நடைபெற்று வருகிறது. ரங்கா, சந்திரிகா, கலா என பல்வேறு ரகங்களில் கிடைக்கும் விதைகளை பெற்றும் அல்லது நாற்றுகளாக விலைக்கு வாங்கியும் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
65 நாட்களில் அறுவடைக்கு வரும் இச்செடிகள், ஓராண்டு வரை விளைச்சல் தரக்கூடியவை. தொடர்ந்து உரம், பூச்சி மருந்து, நீர் மேலாண்மை மூலமாக இது சாத்தியமாகிறது. ஓர் ஏக்கருக்கு 6000 முதல் 7000 நாற்றுகள் வரை நடவு செய்யப்படுகின்றன. அதேபோல், ஓர் ஏக்கருக்கு 6 டன் முதல் 15 டன் வரை விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த சித்திரை மாதத்தில் நடவு செய்த விவசாயிகளுக்கு ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் தொடர் விளைச்சல் கிடைத்தது. அப்போது கிலோ ரூ.150 வரை விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பச்சை மிளகாய்க்கு கூடுதல் விலை கிடைப்பதை அறிந்த மற்ற விவசாயிகளும், மிளகாய் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்தனர். அதன் விளைவாக, கடந்த சில மாதங்களாக உற்பத்தி அதிகரித்து, விலையும் மளமளவென சரிந்து தற்போது கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதனால் பச்சை மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டம் போளரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் கூறும்போது, ‘‘இன்றைய சூழலில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. மிளகாயை பொறுத்தவரை நோய் தாக்குதல் ஏராளம். அதனால், வாரம் ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தே ஆக வேண்டும். தேவையான உரமும் அவசியம். ஆள் கூலி, வண்டி வாடகை உள்ளிட்ட செலவுகளை மேற்கொண்ட நிலையில், அறுவடை தொடங்கிய நேரத்தில் கிலோவுக்கு ரூ.150 கிடைத்தது. இது படிப்படியாக குறைந்து, கடந்த 2 மாதங்களாக கிலோ ரூ.30-க்கும் குறைவாக விற்றது.
தற்போது கிலோ ரூ.10 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. பறிக்கும் கூலிகூட கட்டுப்படியாகாது என்பதால், மிளகாய் பறிக்கப்படாமல் செடியிலேயே உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு மட்டுமின்றி கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சூழல்களில் அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதலையும் அரசு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘காய்கறி பயிர்களை விவசாயிகளே நேரடியாக வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்கின்றனர். சந்தை நிலவரங்களுக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விலை ஏற்ற, இறக்கத்தை துறையால் கட்டுப்படுத்த இயலாது. மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது தொடர்பாக, உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி விரைவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’’ என்றனர்.