கார்த்திகை தீபத் திருவிழா: திண்டுக்கல்லில் தயாராகும் சுட்டி விளக்குகள் முதல் குபேர விளக்குகள் வரை!


படங்கள்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: திருகார்த்திகை தீபத்திருவிழாவிற்கு திண்டுக்கல்லில் கைவினை கலைஞர்களால் களிமண்ணைக்கொண்டு சுட்டி விளக்குகள் முதல் குபேர விளக்குகள் வரை தயாரித்து பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே களிமண்ணை கொண்டு கைவினைஞர்கள் பலர் சீசனுக்கு ஏற்ப விளக்குகள், விநாயகர் சிலை, அலங்கார சிலைகள், கொலு பொம்மைகள் ஆகியவற்றை தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதை சிறு தொழிலாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலைகள், நவராத்திரி விழாவிற்காக கொலு பொம்மைகள், கார்த்திகை தீப திருவிழாவிற்கு களிமண்ணால் பல்வேறு வகையான விளக்குகள் தயாரித்து விற்பனைக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

சீசனுக்கு ஏற்ப வேலைகள் கிடைப்பதால் ஆண்டுதோறும் வேலை நடைபெறுகிறது. தற்போது கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு சில தினங்களே உள்ளதால் களிமண்ணால் ஆன பல்வேறு விளக்குகளை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். திண்டுக்கல் சுற்றுப் பகுதிகளில் இருந்து களிமண் எடுத்துவரப்பட்டு இதை கொண்டு விளக்குகள் தயாரிக்கின்றனர்.

இதில் சிறிய சுட்டிவிளக்கு, தேங்காய் விளக்கு, முறம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, லட்சுமி விளக்கு, ஸ்டார் விளக்கு, அன்ன விளக்கு, குத்து விளக்கு என பல்வேறு வகையான விளக்குகளை களிமண்ணால் செய்கின்றனர். பின்னர் இதை சூலையில் வைத்து சுட்டு எடுத்து அதற்கு வர்ணம் தீட்டுகின்றனர். தொடர்ந்து விற்பனைக்கு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வந்து மொத்தமாக விளக்குகளை விற்பனைக்கு வாங்கிச் செல்கின்றனர். சுட்டி விளக்கு இரண்டு ரூபாய் முதல் பெரிய அளவிலான விளக்குகள் ரூ.200 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் விளக்குகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்துள்ளதால் சுடுமண் விளக்குகள் தயாரிப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

x