ராமேசுவரம்: நமது மரபுச் சின்னங்களை இளைய தலை முறையினர் அறிந்து, பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அழிந்துவரும் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொண்டி அருகேயுள்ள இடையமடம் சமணப் பள்ளியை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சுந்தரபாண்டியன்பட்டினம், பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் கோபால மடம், ராமர் பாதம் என அழைக்கப்படும் கோயில், சமணப் பள்ளி ஆகியவை 2016-ம் ஆண்டு கண்டறியப்பட்டன.
இக்கோயில் கருவறை, மகா மண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மகாமண்டப வலதுபுற சுவரில் 27 செ.மீ. உயரம், 17 செ.மீ. அகலம் உடைய நின்ற நிலையிலான 23-ம் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் புடைப்புச் சிற்பம் உள்ளது. அதன் அமைப்பைக் கொண்டு கி.பி. 9-ம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப்பட்டதாக கருதலாம்.
இதன் கருவறையில் அமர்ந்த நிலையில், சமண தீர்த்தங்கரர் கற்சிற்பம் இருந்து காணாமல் போனதாக சொல்லப் படுகிறது. கருவறை விமானம் இன்றி உள்ளது.கருவறை, மகா மண்டபத்தில் மீன்கள் புடைப்புச் சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன.
18-ம் சமணத் தீர்த்தங்கரர் அரநாதர் வாகனம் மீன் என்பதால், இது அவருக்கு கட்டப்பட்டதாகக் கருதலாம். சுவரில் ஓவியங்கள் இருந்து அழிந்துள்ளன. மகாமண்டபம் சுவரில் உரலில் மருந்து இடிக்கும் ஒருவரின் புடைப்புச் சிற்பம், சமணர்களின் மருத்துவ தானத்தைக் குறிப்பதாக உள்ளது. இங்கு 4 துண்டு கல்வெட்டுகள் உள்ளன. இவை கி.பி.13-ம் நூற்றாண்டு விக்கிரமபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் உள்ளது.
இதன் அருகில் நான்கு தூண்களுக்கு நடுவே கல்லால் அமைக்கப்பட்ட இரு பாதங்களின் கோயில் உள்ளது. இதன் இரு தூண்களில், தலைக்கு மேல் ஒரு குடை அமைப்புடன், வணங்கிய நிலையிலுள்ள இருவர் சிற்பம் உள்ளது. இவர்கள் இதை அமைத்தவர்களாக இருக்கலாம். இதன் முன் கருடாழ்வார் சிற்பம் உள்ளது. இது சுந்தரபாண்டியன் பட்டினத்தில் இருந்து அழிந்து போன தசரத ராமவிண்ணகராழ்வார் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டதாக இருக்கலாம்.
இச்சமணர் கோயில், கிழவன் சேதுபதி காலத்தில் கோபால மடமாக செயல்பட்டுள்ளது. அதற்கு மன்னர் நிலதானமும் கொடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் அனுமந்தக்குடியில் ஒரு கட்டுமான சமணப் பள்ளி வழிபாட்டில் உள்ளது. சமணப் பள்ளியாக, கோபால மடமாக வரலாற்றில் இடம்பெற்ற இக்கோயிலின் மேல் பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. இதன் உள்ளே இடிந்து அழிந்து வருகிறது. இதைப் பழுது நீக்கி தொல்லியல் சின்னமாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.