ஆழியாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி


ஆழியாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

பொள்ளாச்சி: ஆழியாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். அங்கு விரைவில் மருத்துவர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா கோட்டூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆழியாறில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

ஆழியாறு, நவமலை, மன்னம்பதி, புளியங்கண்டி, அங்கலகுறிச்சி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக ஆழியாறு இருக்கிறது.

வால்பாறை மலைப்பாதையில் விபத்தில் சிக்கியவர்கள், வன விலங்குகள் தாக்கி காயம் அடைந்தவர்கள், ஆழியாறு அணை மற்றும் ஆற்றுப்பகுதியில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி முதலுதவி சிகிச்சைக்காக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு பணிபுரிந்து வந்த மருத்துவர் இட மாறுதல் பெற்று சென்று விட்டதால், தற்போது மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. மருத்துவர் இன்றி நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆழியாறு அணை மற்றும் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் காயமடைகின்றனர்.

இவர்கள் ஆழியாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குதான் முதலுதவிக்காக வருகின்றனர். இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக மருத்துவர் இல்லாததால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள், சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்து வந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைவில் மருத்துவரை நியமிக்க வேண்டும்” என்றனர்.ஆழியாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

x