சுவையான உணவு தயாரிக்க ஆட்டுக்கல், அம்மிக்கல் - பழமைக்கு திரும்பும் மக்களால் வரவேற்பு!


குழந்தைகள் விளையாடுவதற்கு தயாரிக்கப்பட்ட சிறிய அம்மிக்கல், ஆட்டுக்கல், குத்துக்கல் உள்ளிட்டவை. படங்கள்: நா.தங்கரத்தினம்

ஒட்டன்சத்திரம்: நவீன உலகில் மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோக பொருட்களின் வருகையால் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கற்களால் செய்யப்பட்ட கருவிகள் இன்று மிக வேகமாக மறைந்து வருகின்றன. அன்று சமையல் செய்வதற்கு உரல், உலக்கை, ஆட்டுக்கல், அம்மிக்கல் மிகவும் உதவியாக இருந்தது.

இதை பயன்படுத்துதல் என்பது ஓர் உடற்பயிற்சியாகவே இருந்தது. குழம்பு மணக்க சுவையான மசாலாக்களை அம்மியில் அரைத்த காலம் மலையேறிவிட்டது. குறிப்பாக, கிராமங்களிலும்கூட ஒரு சில வீடுகளில் மட்டும்தான் இவற்றை இன்று பார்க்க முடிகிறது.

ஆனாலும் கூட அம்மி, உரல், ஆட்டுக்கல் என கற்கால நாகரிகத்தின் சுவடுகள் நம்மிடையே இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி, இடையகோட்டை, கள்ளி மந்தையம், கொ.கீரனூர் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான கல் பட்டறைகள் உள்ளன. இன்னும் இந்த கல் பட்டறைகள் உயிர்ப்புடன் இருக்க காரணம் சமீபகாலமாக, வீடுகளில் பழங்கால முறையில் உணவு தயாரிக்கும் முறையை மக்கள் திரும்பவும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

பல மாடல்களில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட கருவிகள் கடைகளில் கிடைத்தாலும் இட்லி, தோசை மாவு அரைப்பதற்கு ஆட்டுக்கல்லும், மசாலா பொருட்களை கையால் அரைக்கும் அம்மி கல்லையும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். சாதாரண கல்லில் செய்யப்படும் ஆட்டுக்கல் சிறியது ரூ.1,500, பெரியது ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையும், அம்மிக்கல் சிறியது ரூ.1,000, பெரியது ரூ.1,500 வரையும் தயாரித்து விற் கின்றனர்.

இந்த ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் முழுவதும் கையால் செய்யப்படுகிறது. இதே போல், கிரானைட் கற்களில் செய்யப்பட்ட ஆட்டுக்கல் சிறியது ரூ.5,000, பெரியது ரூ.7,000 வரையும், அம்மிக்கல் சிறியது ரூ.2,000, பெரியது ரூ.2,500 வரையும் விற்கின்றனர். இவை இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, வெளியூர்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

இது தவிர, குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிய அம்மிக்கல், ஆட்டுக்கல், குத்துக்கல், திருகல், உரல் அடங்கிய ஒரு செட் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் செய்வதற்கு என புதிது புதிதாக மின்சார கருவிகள் வந்தாலும், பழமையை மறக்காத மக்களை நம்பி இன்னும் ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பில் ஏராளமான தொழி லாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்டுக்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ஆறுமுகம்.

கள்ளிமந்தையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (60) கூறியதாவது: எனது 12 வயதில் இருந்து ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரித்து வருகிறேன். இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது. ஒட்டன்சத்திரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பு தொழிலை நம்பியுள்ளன. மிக்ஸி, கிரைண்டரில் உணவு பொருட்களை தயாரித்து சாப்பிட்டாலும், பழங்கால முறையில் ஆட்டுக்கல், அம்மிக்கல்லில் தயாரித்து சாப்பிட்ட சுவை கிடைக்காது.

அந்த சுவை அறிந்தவர்களின் வீடுகளில் இன்னும் ஆட்டுக்கல், அம்மிக்கல் நிச்சயம் இருக்கும். இல்லாதவர்கள் அதன் அருமை, பெருமைகளை தெரிந்து கொண்டு ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றை தேடி வாங்கிச் செல்கின்றனர். அவர்களால் எங்கள் தொழிலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

பாறையில் இருந்து கல்லை வெட்டி எடுத்து வந்து, ஓர் ஆட்டுக்கல் செய்வதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகும். நாளொன்றுக்கு ஓர் ஆட்டுக்கல், அம்மிக்கல்லாவது விற்றால் தான் நாங்கள் பிழைக்க முடியும். சாதாரண கல்லில் செய்யப்பட்ட ஆட்டுக்கல், அம்மிக்கல் பிடிக்காதவர்களுக்கு ஆர்டர் கொடுத்தால் கிரானைட் கற்களில் செய்து தருகிறோம். ஆட்டுக்கல், அம்மிக்கல்லை தேடி வரும் மக்களுக்காக சாலையோரங்களில் கடை அமைத்து விற்பனையில் ஈடுபடுகிறோம், என்றார்.

x