உதகை: உதகையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதை பந்துகளை மாணவர்கள் பரிசளித்தனர்.
இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உதகை கிரசென்ட் பள்ளி மாணவர்கள் வித்தியாசமாக குழந்தைகள் தினத்தை கொண்டாடினர். உதகை தாவரவியல் பூங்காவில் கூடிய பள்ளி மாணவர்கள் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதைப் பந்துகளை பரிசாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, பள்ளி தாளாளர் உமர் பாரூக் முன்னிலையில் தொடங்கி வைத்தார். குழந்தைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதைப் பந்துகளை வழங்கி மரங்களின் முக்கியத்துவத்தை தெரிவித்து, இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் வலியுறுத்தினர்.