குமுளி: சபரிமலை சீசன் தொடங்க உள்ளதால் தேனி மாவட்ட புறவழிச்சாலையில் உள்ள அசைவ ஹோட்டல்கள் பல சைவத்துக்கு மாறி வருகின்றன. இதற்கான விளம்பர பலகைகளையும் பக்தர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையானது தமிழக கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக (எண்:183) உள்ளது. 2022ம் ஆண்டு அக்.1ம் தேதி இச்சாலை பயன்பாட்டுக்கு வந்தது. இதன் வழியே வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். மேலும் சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டு காலங்களிலும் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த வழியே சென்று திரும்புகின்றனர்.
இவர்களை முன்வைத்து இச்சாலை ஓரங்களில் ஹோட்டல், பேக்கரி, தங்கும் விடுதி, டீ கடைகள் வெகுவாய் அதிகரித்து விட்டன. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக 15-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. ஆகவே ஐயப்ப பக்தர்களை முன்வைத்து இப்பகுதியில் உள்ள அசைவ ஹோட்டல்கள் பல சைவத்துக்கு மாறி உள்ளன. இதற்காக அசைவ தயாரிப்புகளை நிறுத்தி அதற்கான விளம்பர பலகைகளையும் அதிகம் காட்சிப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் ஜீவா கூறுகையில்,"சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் போன்றவர்களை நம்பியே புறவழிச்சாலை உணவு வர்த்தகம் உள்ளது. ஆகவே இதுபோன்ற மாற்றத்தை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகும்" என்று ஹோட்டல் மேலாளர் கூறினார்.