திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கி.பி 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் க. மோகன் காந்தி தலைமையில், காணிநிலம் மு. முனுசாமி, தூய நெஞ்சக் கல்லூரி மாணவர் ஹரிஷ் மற்றும் ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 2 நடுகற்களைக் கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் பேராசிரியர் முனைவர் க. மோகன் காந்தி கூறியதாவது, ''திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் 8 கி. மீ., தொலைவில் கூடப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் இயற்கைச் சூழலுடன் இந்த கிராமம் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஏராளமான நடுகற்களை எங்களது ஆய்வுக் குழுவால் கண்டறியப்பட்டது. குறிப்பாக போரில் வீரமரணமடைந்த போர் மறவர்களின் மனைவியர் உடன்கட்டை ஏறியதற்கான சான்றாகப் பல வீரமங்கையரின் நடுகற்களும் இந்த கிராமத்தில் கண்டறியப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மாணவர் ஹரிஷ் கொடுத்த தகவலின் படி எங்கள் ஆய்வுக்குழுவினர் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் புதியதாக 2 நடுகற்களைக் கண்டெடுத்துள்ளோம். இங்கு கண்டெடுக்கப்பட்ட இரண்டு நடுகற்களும் கூடப்பட்டில் உள்ள வள்ளுவர் காலணியில் சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ளன இந்த 2 நடுகற்களுமே மண்ணில் ஆழமாகப் புதைந்துள்ளன. இந்த கற்கள் 2 அடி உயரத்தில் காட்சி தருகின்றன. முதல் நடுகல்லானது, இரண்டடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் வீரன் குதிரை மீது அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார்.
இந்த குதிரையானது சேனம், கடிவாளத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குதிரையின் முகம் சிதைந்துள்ளது. வீரனின் வலது கையில் குறுவாள் தாங்கிய நிலையிலும், இடது கை குதிரையின் கடிவாளத்தைப் பிடித்த நிலையிலும் காணப்படுகிறது. இந்த வீரன் படைத் தளபதி அல்லது இனக்குழுத் தலைவனாக இருக்க வேண்டும். இதன் அருகே அமைந்துள்ள இரண்டாவது நடுகல்லானது இரண்டடி உயரமும் 2.5 அடி அகலமும் கொண்டதாகக் காட்சித் தருகிறது.
இந்த நடுகல்லின் வலது பக்கம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. வலது கையில் குறுவாளைக் கையில் தூக்கிய வண்ணம் உள்ளது. இடது கை தொங்கவிடப்பட்ட நிலையில் ஒரு குறுவாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருகாமையில் வீர மங்கை உடன்கட்டை ஏறிய நிலை காட்டப்பட்டுள்ளது. வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டை, வலது கை இடுப்பில் ஊன்றிய நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் உள்ளது.
கூடப்பட்டுப் பகுதியில் நடைபெற்ற பெரிய போரில் இந்த இரு வீர மறவர்கள் உயிர் இழந்துள்ளனர். ஒரு வீரனோடு அவர் மனைவியும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கூடப்பட்டில் உள்ள வேடியப்பன் கோயிலில் 5 அடி உயரத்தில் பிரமாண்டமான நான்கு நடுகற்களும் 4 வீர மங்கையர் நடுகற்களும் ஏற்கனவே கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடுகற்கள் அனைத்தும் கி . பி 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. இது போன்ற வரலாற்று தடயங்களை பாதுகாக்க மாவட்டதொல்லியல் துறையினர் முன்வர வேண்டும்''. இவ்வாறு அவர் கூறினார்.