தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரூ.3.5 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வரும் ராஜராஜ சோழன் மணிமண்டபம் அடுத்த மாதம் முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் 1995-ம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவின் பேரில், சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலையில் 3.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.60 கோடியில் ராஜராஜ சோழன் மணிமண்டபம் கட்டப்பட்டது.
இந்த மண்டபத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், நாளடைவில் பொலிவிழந்தது. இதையடுத்து, இந்த மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பல்வேறுசமூக ஆர்வலர்கள், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இந்த மணிமண்டபத்தை ரூ.3.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 98 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில், அடுத்த மாதம் முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறை கட்டுமானப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை கட்டுமானப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியது: புதுப்பிக்கப்பட்டு வரும் மணிமண்டபத்தில், புல்தரைகள் சீரமைக்கப்பட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ரயில், ஊஞ்சல்கள், ராஜராஜன் அருங்காட்சியகம் உள்ளிட்டவை புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.
72 அடி உயரம் உள்ள மணிமண்டபத்தின் உச்சிக்கு சென்று பார்த்தால், தஞ்சாவூர் பெரியகோயில், சமுத்திரம் ஏரி உள்ளிட்டவைகள் ரம்மியமாக காட்சியளிக்கும். தற்போது 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதம் உள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: சோழர் காலத்து வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் 1884-ம் ஆண்டு முதல் சோழர் அருங்காட்சியகம் இயங்கி வந்தது. பின்னர், 1995-ம் ஆண்டு முதல் மணிமண்டபத்தில் இந்த அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.
இங்கு சோழர் காலத்துக் கல்வெட்டுகள், சிலைகள், உலோகத்தால் ஆன பூஜைப் பொருட்கள், கலைப்பொருட்கள், சோழர் காலத்து உதிரி சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவைகள் உள்ளன. தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் இந்த அருங்காட்சியகம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது என்றார்.