மதுரை: சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து விஏஓ-வான பட்டதாரி இளைஞர், தம்மைப் போல மற்றவர்களும் அரசுப் பணியாளராக வழிகாட்டுவதோடு, இலவச பயிற்சியும் அளித்து வருகிறார்.
மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பா.மணிமாறன் (36). இவர் இரவு நேரங்களில் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து கொண்டே மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.காம் (2006-2009), காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் எம்.காம்., எம்.ஃபில். படித்தார்.
இவர் நண்பரின் வழிகாட்டலில் 2014-ல் விஏஓ தேர்வில் வெற்றி பெற்று 2015-ல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர், பழ மார்க்கெட்டில் தம்மோடு வேலை பார்த்த மற்ற நண்பர்களையும் அழைத்து பயிற்சி அளித்து அரசுப் பணியாளர்களாக மாற்றி னார். அதேபோல், அப்துல்கலாம் வழி நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கி ஆழ்வார்புரத்தில் இலவச பயிற்சி அளித்து பலர் அரசு பணிக்கு செல்ல வழிகாட்டி வருகிறார்.
இதுகுறித்து தற்போது வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பா.மணிமாறன் கூறியதாவது: ஆழ்வார்புரம் பகுதி கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அவர்களது பிள்ளைகளும் கூலித் தொழிலாளர்களாகவே இருந்தனர். என்னைப் போன்று நண்பர்கள் சிலரும் கல்லூரியில் படித்தபோதே பழ மார்க்கெட்டில் இரவில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டோம். அதில் கிடைத்த வருவாயை கொண்டு படிப்புக்கான செலவை நாங்களே பார்த்து கொண்டோம்.
அரசு பணியில் சேர்ந்தால் தான் நமது நிலைமை மாறும் என்பதை உணர்ந்தோம். இதையடுத்து நண்பரின் வழிகாட்டலில் 2015-ல் குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்று ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், புனவாசலில் விஏஓவாக பணியில் சேர்ந்தேன்.
என்னைப் போன்று சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்த நண்பர்களையும், அரசு வேலைக்கு செல்ல பயிற்சி அளித்தேன். இதில் சிலரும் அரசு பணியில் சேர்ந்தனர். இதேபோல ஆழ்வார்புரத்தில் உள்ள மற்றவர்களும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் என்ற அமைப்பு மூலம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து இலவசமாக பயிற்சி அளித்தோம்.
அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினோம். அவர்கள் உயர்கல்வி கற்க வழிகாட்டினோம்.
தற்போது காவல்துறை, கூட்டுறவுத்துறை, ராணுவம், மருத்துவத்துறை என 20-க்கும் மேற்பட்டோர் அரசு வேலையில் சேர்ந்துள்ளனர். நான் பணியாற்றிய புனவாசல் கிராமத்திலும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக பயிற்சி அளித்தேன். தற்போது குரூப் 4 தேர்வில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருந்தாளுநர் தேர்வில் மாணவர் ஒருவர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கல்வியால் மட்டுமே முன்னேற முடியும், படித்தால் மட்டுமே ஜெயிக்கலாம் என்பதை இப்போதைய மாணவர்களிடம் சொல்லி ஊக்கப்படுத்தி வருகி றோம். தற்போது பதவி உயர்வில் வருவாய் ஆய்வாளராக கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன் என்று கூறினார்.