ஐஆர்சிடிசி சார்பில் கோவையில் இருந்து சிக்கிம், டார்ஜிலிங் பகுதிகளுக்கு சிறப்பு விமான சுற்றுலா


கோவை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் சிக்கிம், டார்ஜிலிங் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐஆர்சிடிசி பாரத்கௌரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரிகளுக்கான கல்விச் சுற்றுலா போன்றவற்றை இயக்கி வருகிறது. ரயில் மூலம் மட்டுமல்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவையில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி சிக்கிம், டார்ஜிலிங் விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாவில் இமயமலை தொடரில் அமைந்துள்ள டார்ஜிலிங், காங்டாக் மற்றும் காலிம்பாங் போன்ற இடங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலை தொடர்கள், அழகான ஏரிகள், புத்த மடாலயங்கள், இந்து கோயில்கள், விலங்கியல் பூங்கா மற்றும் ஜப்பானிய கோயில் போன்ற இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 நாட்கள் கொண்ட சுற்றுலாவிற்கு ரூ.53,540 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் விமான கட்டணம், நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, வாகன வசதி, காலை உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விடுப்பு பயண சலுகை (எல்டிசி) பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஐஆர்சிடிசி பகுதி அலுவலகம் - கோவை, 209, மாருதி டவர், அரசு மருத்துவமனை எதிரில், கோவை - 641 018 என்ற முகவரியில் அணுகலாம். அல்லது 90031 40655 எண்ணிலோ, www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

x